×

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு முடிவைத் திரும்ப பெற்றது ஆசிரியர்கள் கூட்டமைப்பு: கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சமரசம்

மும்பை: கல்வி அமைச்சர் தீபக் கேசர்கருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்பதான முடிவை திரும்ப பெற்றது ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு. ஜூனியர் கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக பள்ளி கல்வி அமைச்சர் தீபக் கேசர்கருக்கு மகாராஷ்டிரா மாநில ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் ஷிண்டே ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து மகாராஷ்டிரா மாநில ஜூனியர் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பஸ்கே கூறுகையில்,‘‘கடந்த ஆண்டும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தோம்.

ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அரசு ஒப்புதல் அளித்ததால் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வரை எங்களது எந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை. மேலும் காலியாக உள்ள 1,298 ஆசிரியர் இடங்களுக்கு 283 இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பள பிரச்னையும் இன்னும் தீர்க்கப்படாததால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.’’ என்று கூறியிருந்தார். தற்போது மகாராஷ்டிராவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது தேர்வு முடிவுகள் வெளியாவதை மேலும் தாமதமாக்கலாம் என்று கல்வித் துறை வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர், மகாராஷ்டிரா மாநில ஜூனியர் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநில தலைமை கல்வி செயலாளர் ரஞ்சித்சிங் டியோல், கல்வி ஆணையர் சுராஜ் மந்தாரே, இணை செயலாளர் துஷார் மகாஜன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கேசர்கர் கூறியதாவது: அரசு பணியாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை வழங்குவது குறித்து மாநில அரசு வெளியிட்ட அரசாணை ஜூனியர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். எனவே 2005ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதிக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் 2005ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஜூனியர் ஆசிரியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஜூனியர் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 253 ஆசிரியர்களின் அரியர் தொகை நிதித்துறை மூலம் விரைவில் வழங்கப்படும். கடந்த 2001ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சிலத் துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பள விகிதம் குறித்த பிரச்னை நிலுவையில் உள்ளது.

அடுத்த 60 நாட்களுக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்.’’ இவ்வாறு கேசர்கர் கூறினார். இதையடுத்து 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதான ஆசிரியர்களின் அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மகாராஷ்டிரா மாநில ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் ஷிண்டே கூறினார்.

The post 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு முடிவைத் திரும்ப பெற்றது ஆசிரியர்கள் கூட்டமைப்பு: கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சமரசம் appeared first on Dinakaran.

Tags : union ,MUMBAI ,Junior College Teachers' Federation ,Education Minister ,Deepak Kesarkar ,Teachers' union ,education ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...