×

ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் : போட்டிக்கு ஓய்எஸ்ஆர் காங்கிரசும் தாராள வாக்குறுதிகள் அறிவிப்பு

அமராவதி: ‘‘ஆந்திராவில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்’’ என தெலுங்கு தேசம் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தனது தேர்தல் அறிக்கையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடுமபத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிவித்தார். இதற்கு போட்டி போடும் விதத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் சம்மன் திட்டத்தை தொடர்வதாக உறுதியுளித்துள்ள தெலுங்கு தேசம், அத்துடன் மாநில அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை நிதியளிக்கும் என உறுதியளித்துள்ளது. இது தவிர பலப் பிரிவினருக்கான நலதிட்டங்களின் வரம்பையும் உயர்த்துவதாக தெலுங்கு தேசம் உறுதியளித்துள்ளது. உயர்க் கல்வி இலவசமாக அளிக்கப்படும் என உறுதியளித்துள்ள தெலுங்கு தேசம், வெளிநாட்டில் படித்தால் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியுள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ..10 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘வேறு யாராலும், இந்த அளவுக்கு சலுகைகளை கற்பனையில் கூட விரிவுப்படுத்த முடியாது’’ என்றார். தெலுங்கு தேசம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. விவசாயிகளுக்கு ஒய்எஸ்ஆர் ரிது பரோசோ என்ற திட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இத்திட்டம் மூலம் ஒ விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.12,500 முதல் ரூ.1 லட்சம் வரை நிதி கிடைக்கும் என உறுதியளித்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிமுகம் செய்த  ‘ஆரோக்கிய ’ என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் வரம்பு நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  ஜூனியர் வக்கீல்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ரூ.100 கோடியில் வக்கீல் நல நிதி உருவாக்கப்படும் என கூறியுள்ளது. ஆந்திர அரசில் காலியாக உள்ள 2.3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி உறுதி அளித்துள்ளார். ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செயயப்படும் என இரு கட்சிகளும் அறிவிக்கவில்லை. இரு கட்சிகளும் அறிவித்துள்ள சலுகைகளை நிறைவேற்ற குறைந்தது ரூ.1.5 லட்சம் கோடி முதல், ரூ.2 லட்சம் கோடி வரை தேவைப்படும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nation ,OCR Congress , Andhra Pradesh, family comes to power, Rs 2 lakh per year
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...