×

செம்பட்டி அருகே குடும்ப தகராறில் விபரீதம்: மகளை கொன்று தந்தை தற்கொலை... மனைவி சீரியஸ்

செம்பட்டி: செம்பட்டி அருகே குடும்ப தகராறில் இன்று அதிகாலை மகளை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (32). இவரது மனைவி முனீஸ்வரி (27). இவர்களது மகன் சந்தோஷ்குமார் (6), மகள் வர்ஷா ஹரிணி (4). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். தம்பதியினர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தனர். முனீஸ்வரியின் நடத்தையில் தங்கமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மகன் சந்தோஷ்குமார் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளான்.

இன்று அதிகாலை 1 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தங்கமணி சுத்தியலால் மனைவியை தாக்கியுள்ளார்.  இதில் ரத்த வெள்ளத்தில் மனைவி கீழே சாய்ந்தார். ஆத்திரம் அடங்காத தங்கமணி அங்கிருந்த மகள் வர்ஷா ஹரிணியை கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்தார். தொடர்ந்து வீட்டில் தூக்கிட்டு தங்கமணி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தங்கமணி மற்றும் சிறுமியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த முனீஸ்வரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். குடும்ப தகராறில் மகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : family dispute ,suicide ,Champagati , Champagne, father suicide, wife Serious
× RELATED ஆங்கில பள்ளி மோகம் தற்கொலைக்கு சமம்: என்சிஇஆர்டி தலைவர் சொல்கிறார்