×

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை முதல் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1200, கொடுவா ரூ.800, பாறை ரூ.600, சங்கரா ரூ.400க்கு விற்பனையானது

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் ரூ.1200, கொடுவா ரூ.800, பாறை ரூ.600, சங்கரா ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 14ம் தேதியோடு மீன்பிடி தடைகாலம் முடிந்தது. தடைகாலம் முடிந்ததையடுத்து 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைந்த விசைப்படகுகள் மட்டுமே கடலில் இருந்து கரை திரும்பின. அசைவ பிரியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி மீன்களே அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. அதே நேரத்தில் மீன்கள் விலையும் குறையாமல் தடைக்காலத்தில் இருந்தது போலவே இருந்தது. இந்நிலையில் நேற்று தடைக்காலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனால், ஆழ்கடலுக்கு சென்ற அதிக அளவிலான விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டு கரை திரும்பின. அதனால், மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் விடுமுறை தினம் என்பதால் மீன் வாங்க நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. காசிமேடு மீன்கள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் மீன்வாங்க காசிமேட்டிற்கு வந்திருந்திருந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளது.

இதனால், காசிமேட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிமாக காணப்பட்டது. அதே நேரத்தில் இந்த வாரம் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக வரும் என்று இருந்தனர். ஆனால் சிறிய வகை மீன்களான வவ்வால், சீலா, பால் சுறா, சங்கரா, இறால், நண்டு, நவரை, மத்தி மீன், காணாங்கத்தை உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. இதனால் பெரிய வகை மீன்கள் வஞ்சிரம், திருக்கை, கொடுவா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் சிறிய வகை மீன்களை வாங்கி சென்றனர்.

அதாவது வஞ்சிரம் கிலோ ரூ.1200முதல் ரூ.1300 வரை விற்கப்பட்டது. அதேபோல கொடுவா ரூ.800 முதல் ரூ.900, திருக்கை ரூ.700, சீலா ரூ.400 முதல் ரூ.500, சங்கரா ரூ.400 முதல் ரூ.500, பாறை ரூ.600 முதல் ரூ.700, பால் சுறா ரூ.400, இறால் ரூ.300 முதல் ரூ.400, நண்டு ரூ.300 முதல் ரூ.400, நவரை ரூ.200, மத்தி ரூ.200, காணங்கத்தை 200 எனவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை முதல் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1200, கொடுவா ரூ.800, பாறை ரூ.600, சங்கரா ரூ.400க்கு விற்பனையானது appeared first on Dinakaran.

Tags : Chennai Kasimat ,Chennai ,Tamil Nadu ,Chennai Kashimat ,Vanjira ,Kodua ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...