×

தரமற்ற முறையில் அமைத்ததால் கரைமேடு - வடதலைக்குளம் இணைப்பு சாலை இரண்டு ஆண்டுகளில் பஞ்சரான அவலம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு - வடதலைக்குளம் இணைப்பு சாலையை ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் அமைத்ததால் 2 ஆண்டுகளிலேயே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை ஏற்பட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது கரைமேடு-வடதலைக்குளம் கிராமங்கள். வடதலைக்குளம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வடதலைக்குளம் கிராமத்தினர் குறித்த நேரத்துக்குள் நகர பகுதியான வடலூர், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசர வாகனங்கள் செல்வதற்கும், கரைமேடு, வடதலைக்குளம் விவசாயிகள் வாலாஜா ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வரும் 400 ஏக்கர் விளை நிலங்களில் விளையும் நெல்லை அறுவடை செய்து கொண்டு செல்வதற்கும் இந்த இணைப்பு சாலை மிகவும் பயன்பட்டு வந்தது.

சென்னை-கும்பகோணம் சாலையை இணைத்து கரைமேடு-வடதலைக்குளம் சாலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால் மாவட்ட நிர்வாகத்துக்கு மேற்கண்ட 2 கிராம மக்களும், விவசாயிகளும் இணைந்து மனு கொடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி-ஊராட்சி துறை திட்டத்தின் கீழ் 2015-16ம் ஆண்டு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.30 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் இந்த தார்சாலையை போட்டுவிட்டு, சாலைக்காக கொட்டப்பட்ட கருங்கல் ஜல்லிகள் அனைத்தையும் இரவோடு இரவாக ஆட்களை வைத்து ஒப்பந்ததாரரே அள்ளிச் சென்று விட்டதாகவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் மேலும் கூறும் போது, இந்த சாலையின் தற்போதைய நிலையை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. கிராம மக்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விஷ பூச்சிகள் கடித்து பாதிப்பு ஏற்பட்டாலோ இந்த சாலை வழியாகத்தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். இவ்வாறான சூழ்நிலையில் சாலையின் அகலத்தை குறைத்தும் தரமற்ற நிலையில் சாலையை போட்டதாலும் கருங்கல் ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து இருக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் நெற்பயிர்களுக்கு களை எடுக்கும் விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் வேலையாட்கள் கரடு முரடான சாலையில் நடந்து செல்லும் போது கால்கள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையின் வழியாக வடதலைக்குளம் சென்றால் மருதூர், கொளக்குடி, உடையூர் உட்பட பல கிராமங்களுக்கு விரைவில் சென்று விடலாம். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து தரமான சிமெண்ட் சாலையாக்கினால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். எனவே விரைந்து தரமான சாலையாக அமைத்து தர வேண்டும் என்று கரைமேடு-வடதலைக்குளம் கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,pandemic , Non-standard road, Seththiyathoppu
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை