×

நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி விறுவிறு: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்


மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி முடிவடையவுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோயில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, ஆதிவராகப் பெருமாள் தமது இடது தொடையில் அகிலவல்லி தாயாரை அமர்த்தியும், இடது திருடிவடியை தம்பதியாய் இருக்கும் ஆதிஷேசன், வாசுகி மீதும் மற்றொரு திருவடியை பூமாதேவி நிலத்தில் ஊன்றியும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இங்கு, காலவ முனிவரின் 360 மகள்களை, தினம் ஒரு மகள் வீதம் 360 பெண்களையும் மணம் புரிந்து கொள்வதால் நித்ய கல்யாண பெருமாள் என பெயர் பெற்றார்.

திருமணமாகாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டி மாலை போட்டுக் கொண்டு சுவாமியை சுற்றி 9 சுற்றுகள் வலம் வந்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அசுர, குலகாலநல்லூர் வராகபுரி, புரி, நித்யகல்யாணபுரி என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் எம்பெருமான் பிராட்டியை இடது பக்கத்தில் வைத்திருப்பதால் திரு எடந்தை எனப் பெயர் பெற்றது. இது நாளடைவில் மறுவி திருவிடந்தை எனப் பெயர் மாறியது. திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இசிஆர் சாலையொட்டி உள்ள 4 ஏக்கர் இடத்தில் திருமண மண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ4.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி திருமண மண்டபம் கட்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக பணிகள் தடைபட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனடியாக தலையிட்டு தங்கு தடையின்றி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது, அங்கு திருமண மண்டபம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது.  இன்னும், ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி விறுவிறு: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nityakalyana Perumal Temple ,Mamallapuram ,Thiruvidantha Nityakalyana Perumal temple ,Nitya ,Thiruvidantha village ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு