×

சுமலதா பிரசார கூட்டங்களில் கட்சி கொடியுடன் உலா வரும் காங்கிரஸ் தொண்டர்கள்: அதிர்ச்சியில் முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: சுயேட்சை வேட்பாளர் சுமலதா அம்பரீசுக்கு ஆதரவாக கட்சி ெகாடியை பிடித்து வரும் காங்கிரஸ் தொண்டர்களின் நடவடிக்கையால், முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத அமைச்சர்கள் கொதிப்படைந்திருப்பதுடன், காங்கிரசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனித்தும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்தும் தேர்தலை எதிர்கொள்கின்றன. பாஜ கட்சி மண்டியா நீங்கலாக 27 தொகுதிகளிலும் (மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவு), மஜத 7 ெதாகுதிகளிலும், காங்கிரசார் 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 28 ெதாகுதியில் பரபரப்புடன் பேசப்படும் தொகுதி மண்டியா நாடாளுமன்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் வாக்காளர்களின் நாடித் துடிப்பை பிடித்துப் பார்க்கவும், அங்குள்ள நிலவரங்களை காணவும் கர்நாடகாவில் உள்ள ஊடகங்கள் மட்டும் இன்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஊடகங்களும் இங்கு முகாமிட்டுள்ளன. அந்த அளவுக்கு மண்டியா மக்களவை தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் அம்பரீசின் மனைவி சுமலதாவுக்கும் இடையே நிலவும் போட்டியே ஆகும். மாநிலம் முழுவதும் 28 தொகுதிகள் இருந்தாலும், மாநில மக்கள் இந்த தொகுதியின் நிலவரத்தைத் தான் உற்றுப்பார்க்கின்றனர். அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் வல்லுனர்கள் முதல் டெல்லி மேலிடம் வரை அரசியல் கட்சிகள் இந்த தொகுதியை உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் மொத்தம் 6 நாடாளுமன்ற தொகுதிகள் மிகுந்த பதற்றமான தொகுதிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் வட மாநிலங்களில் இருப்பதாகவும், ஒன்று மட்டும் தென் இந்தியாவில் உள்ள மண்டியா நாடாளுமன்ற தொகுதியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே தான் இங்கு சி.ஆர்.பி.எப்., துணை ராணுவப்படை வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மண்டியா ெதாகுதியில் நிகில் குமாரசாமிக்கும், சுயேட்சை வேட்பாளர்  சுமலதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சுமலதாவை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, 8 மஜத எம்.எல்.ஏ.க்கள், இரு அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், சுமலதா அம்பரீஷ் தனி ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை செய்து வருகிறார். இவருக்கு ஆதரவாக கன்னட திரைப்பட நடிகர்களான தர்ஷன் மற்றும் யஷ் ஆகிேயார் தனித்தனியாக சென்று தனது ரசிகர்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக இருப்பதால் ஆட்சி அதிகாரத்தை வைத்து நடிகர் தர்ஷன் மற்றும் யஷ் ஆகியோரை அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர். மேலும் சுமலதாவை விமர்சனம் செய்யும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை மஜத அமைச்சர்களும், முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களும் கூறி வருகின்றனர்.

ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், ‘‘இவர்களின் குற்றச்சாட்டுக்கு நான் பதில் கூறமாட்டேன். ஆனால், என்னை விமர்சனம் செய்வோருக்கு தேர்தல் நடக்க உள்ள 18ம் தேதி மண்டியா வாக்காளர்களே பதில் கூறுவார்கள்’’ என்று சுமலதா கூலாக கூறி வருகிறார். சுமலதா வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது மஜத, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் இரண்டாம்் நிலை தலைவர்கள் கட்சி கொடிகளை பிடித்தபடி சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே, பாஜவினர் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமலதா பிரசாரம் செய்யும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பாஜவினர் ெகாடியை பறக்க விடுகின்றனர். இவர்களுடன், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் கொடிகளை பிடித்துள்ளதால், மூன்று கட்சிகளின் கொடியை பார்த்து மஜதவினர் அதிலும் முதல்வர் குமாரசாமி மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில், மஜதவினரை கண்டறிந்து கட்சியின் கொடியை சுமலதா பிரசார கூட்டங்களில் பயன்படுத்துவதை மஜதவினர் தடுத்து விட்டனர். ஆனால், காங்கிரசார் மட்டும் சுமலதா பிரசாரக் கூட்டங்களில் கட்சியின் கொடியை பயன்படுத்துவதை தவிர்க்கவில்லை.

கட்டளைக்கு கவலைப்படாத தொண்டர்கள்
சுமலதா பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டனர். அப்படியிருந்தம் காங்கிரஸ் கொடி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், சுமலதா பிரசார கூட்டத்தில் ெகாடி பிடிப்பதை நிறுத்தவில்லை என்றால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், கட்சியிலிருந்து வெளியேற்றினாலும் கவலையில்லை என தொண்டர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் காங்கிரஸ் மேல் மட்ட தலைவர்களுக்கு பதில் அளித்து தொடர்ந்து சுமலதா பிரசாரக் கூட்டத்தில் கொடியை பிடித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இதன் இடையே சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சுமலதாவுக்கு ஆதரவு தெரிவிப்போர் கட்சியை விட்டு வெளியேறுங்கள்.

இ்ல்லையென்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அப்படியிருந்தும் சுமலதா பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கொடியை பிடிக்கத் தவறவில்லை. இதன் இடையே வரும் 12ம் தேதி கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம் சுமலதாவின் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் கொடிகளை பிடிப்பதற்கு ஒரு முடிவு கட்டுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Chief Minister ,Sumalatha ,campaign meetings , sumalata, meeting, Congress, CM Kumaraswamy,
× RELATED வேட்பாளரின் பிரசாரத்திற்கு...