×

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணியை தாக்கிய டிடிஆர் மீது வழக்கு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணியை தாக்கிய டிடிஆர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சாய்பாபு (28). பல்லாவரம் அடுத்த குன்றத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர், நேற்று காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயில் மூலம் வந்துள்ளார். அப்போது, அவர் 2வது வகுப்பு டிக்கெட் எடுத்துவிட்டு முதல் வகுப்பில் தவறுதலாக பயணித்துள்ளார். ரயில் தாம்பரம் ரயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு வந்தபோது, அங்கு டிடிஆர் காட்வின் ஜெபராஜ் (32) என்பவர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சாய்பாபு 2வது வகுப்பு டிக்கெட் எடுத்துவிட்டு முதலாம் வகுப்பில் பயணித்தது தெரியவந்ததால், அவரை பிடித்து அபராதம் செலுத்த வேண்டும் என டிடிஆர் காட்வின் ஜெபராஜ் கூறியுள்ளார். அப்போது சாய்பாபு தவறுதலாக பெட்டி மாறி ஏறிவிட்டதாக தெரிவித்தார். அதை ஏற்காத டிடிஆர், அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சாய்பாபு அபராதம் செலுத்தியுள்ளார். அப்போது டிடிஆர் காட்வின் ஜெபராஜ், அபராதம் செலுத்தியதற்கான ரசீதை சாய்பாபுவிடம் கொடுத்துள்ளார். அதை அவர் கசக்கி கீழே போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிடிஆர் காட்வின் ஜெபராஜ், நான் ஒரு அதிகாரி என் எதிரிலேயே, நான் கொடுத்த ரசீதை கசக்கி போடுகின்றாயா? என கூறி சாய்பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர்  சாய்பாபுவை தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த டிடிஆர் காட்வின் ஜெபராஜ், போலீசார் முன்பும் சாய்பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாய்பாபு, பெட்டி மாறி தவறுதலாக ஏறிவிட்டேன் என கூறியும் நீங்கள் அபராதம் செலுத்த சொன்னீர்கள். அதையும் நான் செலுத்திவிட்டேன். அதன் பின்பு அந்த ரசீதை வைத்துக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது எனது விருப்பம்.
எனக்கு அந்த ரசீதை வைத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதனால் தான், ரசீதை கீழே போட்டேன். அதற்கு எப்படி நீங்கள் என்னை அடிக்கலாம் என கூறினார். போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து டிடிஆர் காட்வின் ஜெபராஜ் மீது சாய்பாபு புகார் அளித்ததின்பேரில், ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்ய முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர் சங்கத்தினர், போலீசாரை வழக்கு பதிவு செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன் ராஜகோபாலுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து டிடிஆர் காட்வின் ஜெபராஜ் மற்றும் பயணி சாய்பாபு ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passenger ,DDR ,railway station ,Tambaram , Tambaram, train station, traveler, DDR, case
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து