சென்னை: ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வதேரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் வந்திருந்தனர்.
தொடர்ந்து தொண்டர்கள் புடைசூழ, அவர் வயநாட்டின் கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் ப்ரியங்காவுடன் இணைந்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து, வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் தேர்தல் தொகுதி பொறுப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதனை அறிவித்துள்ளது. கே.வி.தங்கபாலு அவர்கள் தேர்தல் முடியும் வரை வயநாட்டடிலேயே தங்கி பொறுப்பாளராக பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
