- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோடி குமாரி
- நாகர்கோவில்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- அஇஅதிமுக
- டி.எம்.சி.
- தேசிய ஜனநாயக கூட்டணி
- டெல்லி பாஜக
நாகர்கோவில்: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக,பாஜ, தமாகா மட்டுமே இணைந்து உள்ளதால், பெரியளவிலான கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் டெல்லி பாஜ திணறி வருகிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக முதல் வாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி முதல் வாரத்தில் திருச்சிக்கு வந்து சென்றார். அப்போது, எடப்பாடி பிடி கொடுக்காமல் நழுவியதால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அமித்ஷா ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார்.
முன்னதாக, தன்னை சந்தித்த வேலுமணியிடம், அதிமுகவுக்குள் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை சேர்க்க வேண்டும், தேமுதிக மற்றும் பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும். ஜனவரிக்குள் இது நடக்கவில்லையென்றால் நடப்பது வேறு என்று அமித்ஷா கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று அதிமுக – பாஜ – அன்புமணியின் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 28ம் தேதி தமிழகத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின் போது கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 28 அன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, அன்புமணி ராமதாஸின் பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதற்காக, டிடிவி மற்றும் ஓபிஎஸ், தேமுதிக இணைக்க பாஜ தீவிரமாக முயன்று வருகிறது.
தென் மாவட்டங்களில் பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடத்தலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-15 தேதிகளில் தமிழகம் வந்து விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடவும், சென்னை மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கூட்டணியை இறுதி செய்யப்படாததால் பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜனவரி 28 பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
இந்த வருகையின் போது நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது கிட்டத்திட்ட 10 முறை தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்தார் பிரதமர் மோடி. ஆனால் அந்த தேர்தலில் பாஜ படுதோல்வியடைந்தது. அதன்பிறகு அரியலூர் மற்றும் கோவை என இருமுறை மட்டுமே தமிழ்நாட்டு பக்கம் எட்டி பார்த்து உள்ளார். தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளார். மே மாதம் தேர்தல் முடியும் எவ்வளவு முறை தமிழ்நாட்டிற்கு வர போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
