×

அணை நிர்வாகத்தில் நடந்த தவறே கேரள வெள்ளப்பெருக்குக்கு காரணம்: நீதிமன்ற ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: அணை நிர்வாகத்தில் நடந்த தவறே கேரள வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று நீதிமன்ற ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 470 பேர் உயிரிழந்தனர். 14 லட்சம் பேர் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் 26,000 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டது. இந்த பேரிழப்புக்கு மனித தவறே காரணம் என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வெள்ளம் குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய ஜேக்கப் பி.அலெக்ஸ் என்ற சட்ட வல்லுநர் தலைமையில் ஒரு நடுவர் ஆய்வுக் குழுவை நியமித்தது. இந்த குழுவின் 47 பக்க ஆய்வறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடே வெள்ளத்தில் தவிக்கும் போது மக்களை மீட்க அரசு சரியான முறையில் செயல்படவில்லை. ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்திருந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. மாநிலத்தில் உள்ள 79 அணைகளிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது அதிர்ச்சியூட்டும் விதத்தில் உள்ளது.

அணை நிர்வாகத்தை அரசு சரிவர செய்யாததால் அணையில் ஏராளமான நீர் நிரம்பி உள்ளது. அந்த நீர் திடீரென திறந்து விடப்பட்டதால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி பலர் மரணமடைந்துள்ளனர். அணை திறப்பதற்கு முன்பே அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நீர் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் அணை பராமரிப்பு வல்லுநர்கள் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெறவேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : floods ,dam , Kerala Flood, State Government, Dam Management, Research
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி