×

வெண்ணாறு கரையில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை : கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

கும்பகோணம்: போலீசாருக்கு மாமூல் கொடுத்து விட்டு கூடலூர் வெண்ணாற்றின் கரையில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம், போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தஞ்சையில் வெண்ணாறு, தென்பெரம்பூரில் பிரிந்து பள்ளியக்ரஹாரம், மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக 60 கிலோ மீட்டர் பயணம் செய்து கடலில் கலக்கிறது. வெண்ணாற்றால் 25 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாகவும் உள்ளது. வெண்ணாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வந்தது. இதையறிந்த வருவாய்த்துறையினர், கரையில் பள்ளம் தோண்டினர். ஆனால் பள்ளத்தை மூடிவிட்டு போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் மாமூல் கொடுத்து மணல் திருட்டு ஜரூராக நடந்து வந்தது.

தற்போது மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெண்ணாற்றின் கரையில் மணலை மணல் வியாபாரிகள் எடுக்க துவங்கியுள்ளன. தஞ்சை மாவட்டம் கூடலூர் வெண்ணாற்றின் கரையில் உள்ள மணலை எடுப்பதால் ஆற்றில் தண்ணீர் வந்தால் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தனர். ஆனால் வருவாய்த்துறையினர் ஆய்வுக்கு வரும் முன்பே மணல் எடுப்பவர்களுக்கு தகவல் வந்து விடுவதால் அவர்கள் எளிதில் தப்பித்து விடுகின்றனர். எனவே வெண்ணாற்றின் கரையில் எடுக்கும் மணலால் ஆற்றில் தண்ணீர் வரும்போது பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெண்ணாற்றின் கரையில் தினம்தோறும் மணல் எடுத்து வருகின்றனர். இதற்காக போலீசாருக்கு மாமூல் சென்று விடுகிறது.

ஒரு சில நாட்களாக போலீசாரே காலை நேரத்தில் கரையில் மணல் எடுப்பவரிடம் வந்து மாமூல் வாங்கி கொண்டு சென்று விடுகின்றனர். வருவாய்த்துறையினரோ அல்லது போலீஸ் அதிகாரிகளோ சோதனைக்கு வருவது, மணல் எடுப்பவர்களுக்கு ரகசிய தகவல் வந்துவிடும். அவர்கள் செல்போன் மூலம் தகவலை ஒருவருக்கு கொடுத்து விடுவர். அவர் மணல் எடுப்பவர்களது குழுவில் இந்த தகவலை போட்டு விடுவர். இதனால் ஆற்றின் கரையில் மணல் எடுப்பவர்களை பிடிக்க முடியாமல் வருவாய்த்துறையினர் திணறி வருகின்றனர். தற்போது தேர்தல் நேரமாக இருப்பதால் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், தேர்தல் கண்காணிப்பு பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் இரவு மட்டுமில்லாமல் பகலிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்  வெண்ணாற்றில் தண்ணீர் வரு போது கரை உடைந்து ஊருக்குள் புகுந்து விடும். இதனால் பல கிராமங்களின் நிலை கேள்விக்குறியாகும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sand dungeon ,beach , Vennaru, sand, robbery
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...