×

தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தனியார் ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தபால் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு செல்லும் வகையில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு விளம்பரம் செய்யக்கூடாது என்ற விதியுள்ள நிலையில், காப்பீடு திட்டம் தொடர்பான தபால்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் இதன் நகல்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இதுவரை 12 புகார்கள் கொடுத்திருப்பதாகவும், ஆனால் அந்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். குறிப்பாக சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ஆளும்கட்சிக்கு ஏஜெண்ட்டுகள் போல செயல்படுகின்றனர் என கூறினார். அதேபோல, மறைந்த ராணுவ வீரர்களின் பெயர்களை சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒட்டு சேகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,election , Election Commission, Consultative Meeting, RS Bharathi
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...