×

கூத்தாண்டவர் கோயிலில் சாகை வார்த்தல் விழா : 16ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அப்போது கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கூவாகம் மற்றும் வேலூர், நத்தம், தொட்டி, சிவலியங்குளம், கீழக்குப்பம், தொட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமவாசிகள் சார்பில் கூழ் குடங்களை மேளதாளம் முழங்க எடுத்து வந்து கோயில் முன் படையல் வைத்து தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.  

தொடர்ந்து இன்று (3 தேதி) பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பில் கிராம மக்கள் சார்பில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும் துவங்குகிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி 16ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக வந்து கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.

தாலி கட்டியபிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சி அளிக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை தங்கள் கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். தொடர்ந்து 17ம் தேதி காலை சித்திரை தேரோட்டமும், 18ம் தேதி விடையாத்தியும், 19ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் சுரேஷ் மற்றும் கிராமவாசிகள், கூவாகம் கிராம பொதுமக்கள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sagittarius Ceremony ,Kuttantavar Temple , Kuttantavar Temple, Sagittarius, Transgender
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...