×

டிக்கெட்டுகளில் மோடி படம் : நோட்டீஸிற்கு விளக்கம் தராததற்காக ரயில்வே, விமான துறைகள் மீது தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் தாங்கள் அனுப்பிய நோட்டீஸிற்கு உரிய விளக்கம் தராததற்காக ஏர் இந்தியாவிடமும் ரயில்வேத்துறையிடமும் தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டிக்கெட்டுகளில் மோடியின் புகைப்படம்


மக்களவை தேர்தலுக்கான தேதியை கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த பிறகும் ரயில் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்தது. இதேபோல், விமான போர்டிங் பாசிலும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் படம் இடம் பெற்றுள்ளது குறித்து சர்ச்சை எழுந்தது.

ரயில்வே நிலையங்களில் வாங்கப்படும் டீ கப்புகளில் (Main Bhi Chowkidar) என்ற பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த டீ கப்பை ரயில்வே பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலானது. இந்த புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘கடந்த 10ம் தேதியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பிரதமரின்  புகைப்படத்தை அகற்றாதது ஏன்?’ என விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் கடிதம்

இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை செயலாளருக்கும்  ரயில்வேத்துறை செயலாளருக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஏர் இந்தியா பயணச் சீட்டில் பிரதமர் மோடி படம் இருந்ததற்காகவும் ரயிலில் பாஜகவின் விளமபர வாசகங்கள் இடம் பெற்றது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்ததாக தேர்தல் ஆணையச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரு நிறுவனங்களும் விளக்கம் அளிக்க தவறியது தங்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அஜய் குமார் குறிப்பிட்டார். தவறு இழைத்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 1 வாரத்திற்குள் தங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அஜய் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Election Commission of India , Railway, Election Commission, Prime Minister Modi, Photo, Train Ticket, Vijay Rupani, Trinamul
× RELATED வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும்...