×

மாணவர் சேர்க்கை தொடர்பான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிவுகளை வெளியிட கூடாது: ஐகோர்ட் அதிரடி

மதுரை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 2009ல் எம்பிபிஎஸ் முடித்த நிலையில்,  2013ல் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்து தற்போது, மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த ஜனவரி 6ல் நடைபெற்ற முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் 1200க்கு 385 மதிப்பெண் பெற்றேன். இந்நிலையில், முதுநிலை மருத்துவ  மாணவர் சேர்க்கையில், தமிழக பொது சுகாதாரப்பணிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு 10 சதவீத கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  தமிழக சுகாதாரத்துறை செயலர் 6.3.2019ல்  அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த அரசாணை உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் முதுநிலை மருத்துவக்கல்வி ஒழுங்குப்படுத்துதல் விதிகளுக்கு  எதிராக உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதால்,  எங்களைப்போன்ற அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஏப்ரல் 1 (நேற்று) முதல் தொடங்குகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி மகாதேவன் நேற்று விசாரித்து, கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் தடைவிதிக்க முடியாது. அதேநேரத்தில், கலந்தாய்வு  முடிவுகளை வெளியிடக்கூடாது என  உத்தரவிட்டு, மனு தொடர்பாக சுகாதாரத்துறை  செயலர், மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக்கல்லூரி தேர்வுக்குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masters ,consultation ,jury , Related , student enrollment, Masters medical, consultation, Judge Action
× RELATED சில்லி பாயின்ட்…