×

எமிசாட், 28 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தொடர் சாதனை

சென்னை: இந்தியாவின் ‘எமிசாட்’ மற்றும் வணிக ரீதியாக வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கை கோள்கள் என மொத்தம் 29 செயற்கைகோள்களுடன்  ‘பி.எஸ்.எல்.வி-சி45’ ராக்கெட்டை வெற்றிகரமாக ‘இஸ்ரோ’ நேற்று  விண்ணில் ஏவியது. ‘பி.எஸ்.எல்.வி- சி44’ ராக்கெட்டை கடந்த ஜனவரி மாதம் ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து இந்தியாவின் ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ‘பி.எஸ்.எல்.வி  -சி45’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகளில் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்தியாவின் ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைகோள்களை ‘பி.எஸ்.எல்.வி-சி45’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ‘இஸ்ரோ’ தயாரானது. இதையடுத்து, ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி  நேர கவுன்ட் டவுன் முடிந்தையடுத்து, இந்தியாவின் ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைகோள்களை ‘பி.எஸ்.எல்.வி-சி45’ ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான்  விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ‘இஸ்ரோ’ நேற்று காலை 9.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில்  செலுத்தியது.

பூமியில் இருந்து ராக்கெட்டை விண்ணில் ஏவியதும் இந்தியாவின் ‘எமிசாட்’ செயற்கைகோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் 17 நிமிடம் 18 விநாடியில் அதன் புவி வட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது.  இந்தியாவின் ‘’எமிசாட்’’ செயற்கைகோளானது பாதுகாப்பு துறை மேம்பாடு, அமெச்சூர் ரேடியோ, மின்காந்த நிற மாலை அளவீடு செய்வது உள்ளிட்ட பயன்பாட்டிற்கு உதவும். மேலும், இந்த செயற்கைகோள் மின்காந்த அலைகள் மூலம் இயங்கும். இதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக சூரிய மின் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வணிக ரீதியாக அமெரிக்காவின் 24  செயற்கைகோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் மற்றும் லிதுவேனியாவின் 2 செயற்கைகோள்கள் என மொத்தம் 28 செயற்கைகோள்கள் 2 மணி நேரத்தில் அதன் புவிவட்ட  பாதையில் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டன. செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் சக விஞ்ஞானிகளுக்கு கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்துக்  கொண்டார்.இதையடுத்து சிவன் பேசியதாவது: ‘பி.எஸ்.எல்.வி -சி45’ ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைகோள்கள் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக செயற்கைகோள்கள் மூன்று  வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தமுறை ராக்கெட்டின் நான்காவது நிலையில் மாணவர்கள் உருவாக்கிய ஒரு விண்வெளி ஆய்வு சாதனமும், வேறு இரண்டு சாதனங்களும் அனுப்பப்பட்டுள்ளது  ‘இஸ்ரோ’ வரலாற்றில் முதல்முறை. இதன் மூலம் மாணவர்கள் எந்தவித செலவும் இல்லாமல் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

‘பிஎஸ்எல்வி -சி45’ திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த ‘இஸ்ரோ’ குழுவுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள். இந்த திட்டத்தில் 95 சதவீதம் ராக்கெட் தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் 60- 70 சதவீத  உதிரிபாகங்கள் வெளியில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.  மேலும்,  இந்த ராக்கெட் ஏவுதலை 1,200 பொதுமக்கள் நேரடியாக கண்டுகளித்துள்ளனர். அடுத்த ராக்கெட் ஏவுதலை ஐந்தாயிரம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இது மேலும் 10 ஆயிரமாக அதிகரிக்கும்.
வரும் மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு மேல் 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி  தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைகோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாக்கப்படுவார்கள். மே மாதத்தின் நடுவில் ‘பிஎஸ்எல்வி’ ராக்கெட் வரிசையில் அடுத்தகட்டமாக ரீசார்ட் -2 பிஆர், கார்ட்டோசாட்-3 மற்றும் சந்திரயான்-2 ஆகிய  திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வருடத்திற்குள் 30 விண்வெளி ஆய்வு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு பேசினார். தொடர்ந்து 4வது நிலையில் ராக்கெட்டின் இன்ஜின் 4 முறை இயக்கி பார்த்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக இருந்தது. முதன்முதலாக 3 வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில்  செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராக்கெட்டின் 4வது நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கழகம், அமெச்சூர் ரேடியோ செயற்கைகோள் நிறுவனம் மற்றும் ‘இஸ்ரோ’  ஆகியவை சேர்ந்து தயாரித்த பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதன் ஆயுட்காலம் 6 மாதமாகும். பொதுவாக ராக்கெட்டின் முதல்நிலையில் ராக்கெட்டின் உந்துதலுக்கு ஏற்ப 6 உந்துவிசை மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், முதல்முறையாக இந்த ராக்கெட்டில் 4 உந்துவிசை  மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டில் 2வது ராக்கெட்
‘பி.எஸ்.எல்.வி-சி 45’ ராக்கெட் ‘பி.எஸ்.எல்.வி’ ரகத்தில் 47வது ராக்கெட் ஆகும். இந்த ஆண்டின் 2வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 71வது ராக்கெட் இதுவாகும். ‘இஸ்ரோ’  மூலமாக இதுவரை 297 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Emisad ,scientists ,ISRO , Emissad, , satellites, BSLV-C 45 ,rocket
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...