×

அகோர வெயிலால் ஆவியாகும் வைகை அணை நீர் : மதுரையில் குடிநீர் பஞ்சம் மிரட்டும் அபாயம்

மதுரை: அகோர வெயில் 100 டிகிரியை தாண்டியதால் வைகை அணை நீர் ஆவியாவது அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலுக்கு பிறகு மதுரையை குடிநீர் பஞ்சம் மிரட்டும் அபாயம் எதிர்நோக்கி உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை மாநகருக்கும். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீருக்காகவும் தினமும் 60 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர காவிரி ஆற்றில்  இருந்தும் குழாய் மூலம் குடிநீர் வருகிறது. வைகை ஆற்றில் மேலக்கால், கோச்சடை, மணலூர் ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ள ஆதார கிணறுகளில் இருந்தும் குடிநீர் எடுக்கப்படுகிறது. மதுரை மாநகரில் ஒரு நாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர். ஆனால் 200 மில்லியன் லிட்டர் தான் சப்ளை செய்யப்படுகிறது. இப்போதே பற்றாக்குறையால் பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஜூன் முதல் வாரம் வரை தேவையான குடிநீர் அணைகளில் இருப்பு வைக்கப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி மே மாத குடிநீருக்கு அணையில் இருப்பு இல்லை.  நேற்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 43.42 அடியாக சரிந்தது. இதில் 25 அடிக்கு மேல் மண் படிந்துள்ளது. அணையில் 1,246 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்போது அகோர வெயில் காரணமாக அணை தண்ணீர் ஆவியாவது அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு அணை மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால். ஆவியாவது இல்லை. அந்த அணைக்கு 7 கனஅடி மட்டுமே வரத்து உள்ளது. அதே நேரத்தில் 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தும், ஒரு நாளில் 8 மில்லியன் கனஅடி தான் குறைகிறது. நேற்று முன்தினம் 1,376 மில்லியன் கன அடியாக இருந்து நேற்று 1,368 மி.கனஅடியாக தான் குறைந்துள்ளது. ஆனால் வைகை அணையில் இருந்து 60 கனஅடி வீதம் திறக்கும் தண்ணீர் ஒரு நாளில் 10 மில்லியன் கனஅடி காலியாகிறது. இதில் 8 மி.கனஅடியே குடிநீருக்கு பயன்படுகிறது.

2 மில்லியன் கன அடிக்கு மேல் ஆவியாவதாக பொதுப்பணித்துறையினர் கணக்கிட்டுள்ளனர். வைகை அணை சமவெளியில் அமைந்துள்ளதால், வெயிலின் தாக்கம் சுட்டெரிப்பதாக பொறியாளர்கள் கருதுகிறார்கள். 100 டிகிரி வெயிலுக்கே இந்த கதி என்றால், அடுத்து வெயிலின் கடுமை 108 டிகிரி தாண்டகூடும் என்று கணிக்கப்படுவதால், அணையில் ஆவியாகும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மக்களவை தேர்தல் முடியும் வரை குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்காமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் சித்திரை திருவிழாவோடு தேர்தலும் சேர்ந்து வருவதால், ஆற்றில் தண்ணீர் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இதே நிலை நீடித்தால், தேர்தல் முடிந்த பிறகு, மே மாதத்தில் அணைநீர் காலியாகும் என கருதப்படுகிறது. கோடை மழை பெய்ய தவறினால் கடந்த ஆண்டு கோடையை போல் 4 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் சப்ளை மாறும் அபாயம் மதுரையை மிரட்டுகிறது.

வைகை அணைக்கு நீர் வராத மர்மம்
 
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 112.85 அடியாக குறைந்தது. அங்கிருந்து தினமும் 100 கனஅடி வீதம் திறக்கப்பட்டும், வைகை அணைக்கு ஒரு சொட்டு கூட வந்து சேரவில்லை. ஏனென்றால் வரும் வழிநெடுகிலும் ஆற்றில் முறைகேடாக 400க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் வைத்து உறிஞ்சி தண்ணீர் திருடப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட வைகைக்கு வரவில்லை என்பதில் மர்மம் உள்ளது. முறைகேடாக உறிஞ்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. ஏனென்றால் இந்த தண்ணீர் திருட்டை தடுத்தால், தேனி தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு பாதிக்கும் என்பதை அதிகாரிகள் பரம ரகசியமாக காக்கிறார்கள்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaigai ,acarai vayal ,Madurai , Sunny, Vaigai Dam, Madurai
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு