×

தொர இங்கிலிபீசுல கலக்குது வம்பில் சிக்கிய தஸ்புஸ் சசிதரூர்: காம்ரேட்கள் சகுனித்தனம்

கேரளாவில் சசிதரூரை, காம்ரேட்கள் சர்ச்சையில் இழுத்துவிட்டுள்–்ளனர். முன்னாள் மத்திய இணையமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தொடர்ந்து 3வது முறையாக ‘ஹாட்ரிக்’ வெற்றி தேடி மீண்டும்  திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் மாநில அமைச்சரும், எம்எல்ஏ.வுமான திவாகரனும், பாஜ சார்பில் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள்  மிசோரம் கவர்னருமான கும்மனம் ராஜசேகரனும் போட்டியிடுகின்றனர். இதனால் இம்முறையும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைப்பதற்காக சசிதரூர் கடந்த சில வாரங்களாக திருவனந்தபுரத்தில் சூறாவளி பிரசாரம்  செய்கிறார். சசிதரூர் அடிக்கடி ஏதாவது வில்லங்கமான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானங்களிலுள்ள எகானமி வகுப்பு, பசு தொழுவத்தை விட மோசமாக உள்ளது  என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். சசிதரூரின் ஆங்கில வார்த்தைகள் எளிதில் யாருக்கும் புரியாது. இவர் டிவிட்டரில் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சசிதரூரின் கடினமான  ஆங்கில வார்த்தைகளை கிண்டல் செய்து ஏராளமான மீம்சுகளும் வந்துள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட டிவீட்டை வைத்து, காம்ரேட்கள் அவரை சிக்கலில் இழுத்துவிட்டுள்ளனர். கடந்த வியாழனன்று மீன் சந்தையில் வாக்கு சேகரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சசிதரூர் டிவிட்டரில் பதிவு செய்தார். அதில், மீன் விற்கும் பெண்களிடம் ஓட்டு கேட்கும் படத்திற்கு கீழ்  “Found a lot of enthusiasm at the fish market, even for a squeamishly vegetarian MP” என்று குறிப்பிட்டிருந்தார்.‘அசைவத்தை பார்த்தாலே குமட்டல் வரும் ஒரு எம்.பி.க்கு கூட, மீன் மார்க்கெட்டில் எழுச்சியான வரவேற்பை பார்த்தேன்’ என்பதுதான் அதன் எளிதான அர்த்தம்.ஆனால், இதை சற்றே திரித்து, ‘சுத்த சைவமான தனக்கு மீன் சந்தைக்கு சென்றபோது வயிற்றை குமட்டி வருவது போல இருந்தது’ என்று சசிதரூர் கூறியதாக வாட்ஸ்அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில்  தகவல்கள் பரவின.

இதையடுத்து சசிதரூருக்கு மீனவர் அமைப்பின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பல்வேறு பகுதிகளில் சசிதரூரைக் கண்டித்து போராட்டங்களும் நடந்தன. தேர்தல் நேரத்தில் இந்த திடீர் சர்ச்சையும்,  போராட்டங்களும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த முறை கடைசி சுற்றில் மீனவர்கள் ஓட்டுக்களால்தான் சசிதரூர் வெற்றி பெற்றார். எனவே தற்போது மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் ஓட்டுகள் சிதறி விடுமோ என பயந்த காங்கிரஸ் தலைமை உடனடியாக  இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சசிதரூரிடம் கூறியது. இதையடுத்து நேற்று முன்தினம் சசிதரூர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சைவமான எனக்கு கூட மீன் மார்க்கெட்டில் வரவேற்பு இருந்ததை தான் குறிப்பிட்டேன். ஆனால்,  அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத கம்யூனிஸ்டுகள் தான் தேவையில்லாமல் பிரச்னையாக்குகின்றனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thasbus Sasitharoor , Dowry Chuckled, Thasbus ,Sasitharoor
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...