×

பேர்ஸ்டோ, வார்னர் அபார சதம் ராயல் சேலஞ்சர்சை பொசுக்கியது சன்ரைசர்ஸ்: பந்துவீச்சில் அசத்தினார் நபி

ஐதராபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆர்சிபி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் நவ்தீப் சாய்னிக்கு பதிலாக 16 வயது இளம் ஸ்பின்னர் பிரயாஸ் ரே பர்மன் அறிமுகமானார். ஐதராபாத் அணியில் வில்லியம்சன் காயம் காரணமாக ஓய்வெடுக்க, புவனேஷ்வர் கேப்டன் பொறுப்பேற்றார். வில்லியம்சன், நதீமுக்கு பதிலாக முகமது நபி, ஹூடா சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியில் இறங்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் டாப் கியரில் எகிறியது. பேர்ஸ்டோ 28 பந்தில் அரை சதம் அடிக்க, வார்னர் 32 பந்தில் 50 ரன்னை எட்டினார். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட இந்த ஜோடி, ஆர்சிபி பந்துவீச்சை சின்னாபின்னமாக்கியது. இவர்களைப் பிரிக்க கோஹ்லி கையாண்ட எந்த வியூகமும் பலனளிக்கவில்லை. அதிரடியைத் தொடர்ந்த பேர்ஸ்டோ 52 பந்தில் சதம் அடித்து அசத்த... ஸ்டேடியத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். பேர்ஸ்டோ - வார்னர் இணை முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவரில் 185 ரன் சேர்த்து சாதனை படைத்தது. பேர்ஸ்டோ 114 ரன் (56 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் உமேஷ் யாதவ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த விஜய் ஷங்கர் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் யூசுப் பதான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, வார்னரும் சதத்தை நிறைவு செய்தார். சதம் விளாசியவுடன் அவர் தனக்கே உரிய பாணியில் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்ததுடன் ஹெல்மெட்டுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்தது. வார்னர் 100 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), யூசுப் பதான் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது. பார்திவ் பட்டேல், ஹெட்மயர் இருவரும் துரத்தலை தொடங்கினர். பார்திவ் 11 ரன் எடுத்து முகமது நபி சுழலில் மணிஷ் பாண்டே வசம் பிடிபட்டார். ஹெட்மயர் 9 ரன் எடுத்த நிலையில், நபி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவால் ஸ்டம்பிங் செய்யப்பட ஆர்சிபி 20 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த சரிவில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து நபி சுழலில் கிளீன் போல்டாக, ஆர்சிபி அதிர்ச்சியில் உறைந்தது. 10 பந்துகளை சந்தித்த கேப்டன் கோஹ்லி 3 ரன் எடுத்து சந்தீப் ஷர்மா வேகத்தில்  வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். மொயீன் அலி 2 ரன், ஷிவம் துபே 5 ரன் எடுத்து நடையைக் கட்ட, பெங்களூர் அணி 7.3 ஓவரில் 35 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

கவுரம் காக்கப் போராடிய கிராண்ட்ஹோம் - ரே பர்மன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. 24 பந்துகள் தாக்குப்பிடித்த 16 வயது ரே பர்மன் 19 ரன் எடுத்து சந்தீப் வேகத்தில் ஹூடாவிடம் பிடிபட்டார். ஓரளவு தாக்குப்பிடித்த உமேஷ் யாதவ் 14 ரன், கிராண்ட்ஹோம் 37 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டாகினர். சாஹல் 1 ரன்னில் வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் 19.5 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் முகமது நபி 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். சந்தீப் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்த, 3 பேர் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 118 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Basto ,Warner ,Sunrise ,Royal Challengers Royal Challengers , Baristow, Warner, Royal Challengers bengaluru
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி