×

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு : ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் சரண், மதுரை மத்திய சிறையில் அடைப்பு

மதுரை: தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 5 பேர், மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இவர்கள் 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மதுரை, தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது கடந்த 2007ம் ஆண்டு மே 9ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, அவரது கூட்டாளிகள் 15 பேர் மற்றும் அப்போது ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த ராஜாராம் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009ல் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சிபிஐ சார்பிலும், கொலை செய்யப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகிய 9 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இதில் அட்டாக்பாண்டி, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி 2 ஆண்டுக்கு மேலாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். இதனால், அவரது கூட்டாளிகள் 8 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவர் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 8 பேரும் தலைமறைவாகினர்.அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் ஆரோக்கிய பிரபு (34), ராமையா பாண்டியன் (40), சுதாகர் (38), ரூபன் (34), மாலிக்பாட்ஷா (54) ஆகிய 5 பேர்  மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சரண் அடைந்த ஆரோக்கிய பிரபு உள்பட 5 பேரும், நேற்று மதியம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விஜயபாண்டி, கந்தசாமி, திருமுருகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dinakaran ,court , Dinakaran newspaper, office burning, saran
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...