×

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் விசாரணை: திமுக தரப்பின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: ஏப்ரல் மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் அதுகுறித்து வரும் 28ம் தேதி விசாரணை மேற்கொள்வதாக நேற்று அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் இறப்பிற்கு பிறகு தற்போது 22 தொகுதிகள் காலியாக உள்ளது. அதில்,”திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் மற்றும் சூலூர் ஆகியவையாகும்.

இந்நிலையில் மேற்கண்ட காலி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் குறித்து தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்: குறிப்பிடப்பட்டது. இதில் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு தான் சூலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் மேற்கண்ட மூன்று தொகுதிகள் தொடர்பாக திமுகவின் தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 வாரத்தில் அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அரவக்குறிச்சி தேர்தல் வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஒட்டப்பிடாரம் வழக்கும் வாபஸ் வாங்க இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் நேற்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வின் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,” தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகியவற்றில் 2 தொகுதிகளின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டப்பிடாரம் மனுவும் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சேர்த்து நடத்த தயாராக இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரியும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதனால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதுகுறித்து வரும் வியாழக்கிழமை அதாவது மார்ச்.28ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என நேற்று உத்தரவிட்டார்.

சிறப்பு கண்காணிப்பாளர் தேவை
இதேப்போல் அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வன்முறைகள் ஆகியவை எதுவும் நடந்து விடாமல் இருக்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பாளரை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ottapiramaram ,Aravakurichi ,hearing ,DMK ,Supreme Court , Tiruparankundram, Ottapidaram, Aravakurchi bypoll, Supreme Court, DMK
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...