×

35 தீயணைப்பு வண்டிகள், 300 வீரர்கள் பங்கேற்பு:கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயை அணைக்க 2 ஹெலிகாப்டர் தீவிரம்: தீயணைப்பு துறை டிஜிபி நேரில் ஆய்வு

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 2வது நாளாக எரியும் தீயை அணைக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 தீயணைப்பு வண்டிகள், 300 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானப்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளது. தீயணைப்பு துறை டிஜிபி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தீயால் ஏற்பட்ட புகையால் 10 கிமீ தூரத்திற்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகியுள்ளனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளின் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளலூரிலுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. தினசரி அங்கு 16 டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. மக்கள் தங்களது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் தருவதால், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் மறு சுழற்சி செய்யாமல் இங்கு கொட்டி வருகிறது. அங்கு மலைபோல் குவிந்திருக்கும் குப்பையில் மீதேன் எரிவாயு உருவாகி வருகிறது. தற்போது வெயில் காலமாக உள்ளதால், குப்பைகள் வெயிலில் காய்ந்து, தீ பிடிக்க ஏதுவாக உள்ளது. அதில் மாநகராட்சி ஊழியர்களால் கவனக்குறைவாகவோ, திட்டமிட்டோ தீ வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் மலை போல் குவிந்துள்ள குப்பைகளில் கடந்த சில நாட்களாக புகை வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு தீ பற்ற துவங்கியது. இதனால் ஏற்பட்ட புகையால் நேற்று வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றியுள்ள 10 கிமீ தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. 25க்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகினர். அதைத்தொடர்ந்து நேற்று தீயணைக்கும் பணி துவங்கியது. கோவையிலுள்ள தீயணைப்பு நிலையத்தினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் ஈடுபட்டனர். நேற்று மாலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் குப்பையின் உள்ளே புகைந்து கொண்டிருக்கும் தீ மீண்டும் நேற்று இரவு கொளுந்துவிட்டு எரிய துவங்கியது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் புகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தகவலறிந்த தமிழ்நாடு தீயணைப்பு துறை டிஜிபி காந்திராஜன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு காலை 7.20 மணிக்கு வந்தார். பின்னர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் எரியும் தீயை பார்வையிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 35 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 300 தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், சூலூர் விமானப்படையில் இருந்து 2 ெஹலிகாப்டர்கள் வரழைக்கப்பட்டது. அதில் ஒரு ஹெலிகாப்டர் தீயை அணைக்கும் பவுடரை மேலிருந்து தூவி வருகிறது. மற்றொரு ஹெலிகாப்டர் குறிச்சி குளத்தில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகளும் தீயணைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். காலை முதல் தீயணைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 2வது நாளாக எரியும் தீயை அணைப்பது வீரர்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. தீயை முழுமையாக அணைக்க 3 நாள் தேவைப்படும், என்கின்றனர் மாநகராட்சி நிர்வாகத்தினர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் பற்றி வரும் தீ சம்பவம் கோவையில் பரபரப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : garbage warehouse ,fire department ,Coimbatore Vellayur ,DGP , 35 fire trucks, 300 players, participation, Coimbatore, Vellalur garbage warehouse fire
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து