×

மீண்டும் என்னை தேர்வு செய்தால் தென்சென்னை தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

சென்னை: மீண்டும் என்னை தேர்வு செய்தால் தென்சென்னை தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவேன், என்று அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதியளித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து  பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ், பாமக மாவட்ட செயலாளர் சிவக்குமார், தேமுதிக ஆனந்தன், பாஜ டால்பின் தர், தமாகா  தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கொட்டிவாக்கம் முருகன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயச்சந்திரன், முன்னாள் எம்எம்எல்ஏக்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது ஜெயவர்தன் மக்கள் மத்தியில் பேசியதாவது:நிலம் கையகப்படுத்துவது போன்ற சிக்கல்களால் தடைபட்ட வேளச்சேரி - புனித தோமையார் மலை வரையிலான பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தேன். மேலும் மத்திய  ரயில்வே துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை வலியுறுத்தியதன் அடிப்படையில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகளில் ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் உள்ள மதகு வர்தா புயலின்  போது உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முதல்வரிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தமிழக அரசின் நிதியாக ரூ.1.4 கோடியும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்ட நிதியின் கீழ் ரூ.40 லட்சமும் ஒதுக்கப்பட்டு தற்போது  புதிய மதகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று எண்ணற்ற பணிகளை தென்சென்னை தொகுதியில் செய்துள்ளேன். மீண்டும் என்னை தேர்வு செய்தால் பல்வேறு பணிகளை தென்சென்னை தொகுதிக்கு  கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayawardene ,AIADMK ,constituency ,Senate ,South , again,several projects,South Senate,AIADMK candidate, Jayawardene ,
× RELATED கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு...