×

சூளகிரி துரை ஏரியில் மண் திருட்டு அதிகரிப்பு

சூளகிரி: சூளகிரி துரை ஏரியில் இரவு நேரத்தில் அதிகரித்து வரும் மண் திருட்டை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிரானைட் மற்றும் மணல், ஜல்லிக்கற்கள் என தினசரி டன் கணக்கில் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி, சூளகிரி பகுதியில் மண் திருட்டு அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, டன் கணக்கில் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சூளகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கடத்தல் ஜரூராக நடைபெற்று வருகிறது. சூளகிரியில் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரை ஏரியில் வண்டல் மண் அதிகமுள்ளது. இந்த ஏரியில், பொக்லைன் மூலம் மண் அள்ளி, 25 லாரிகளில் கடத்திச் செல்கின்றனர். ஜனநடமாட்டம் ஓய்ந்த பின்னர், இரவோடு இரவாக மண் கடத்திச் செல்கின்றனர். ஏரியில் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், நடுப்பகுதி வரை சென்று லாரி, லாரியாக மண் எடுத்துச் செல்கின்றனர். எனவே, அதிகாரிகள் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு, மண், மணல் மற்றும் கற்கள் எடுத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், லைசென்ஸ் இன்றி டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pond lake ,Suluggery , Sulagiri, Thurai Lake, Soil
× RELATED சூளகிரி அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு