×

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொண்டாட்டம்: வாடகை வாகனங்களுக்கு கடும் கிராக்கி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோயில்களில் நாளை பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வர தொடங்கியுள்ள நிலையில் வாடகை வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.தென்மாவட்ட மக்களின் வழிபாட்டில் சாஸ்தா என்னும் அய்யனார் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பம் மற்றும் குல விருத்திக்காக சாஸ்தா கோயில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழா தினத்தன்று அவரவருக்குரிய குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பிரான்சேரி கரையடிமாடசாமி, சீவலப்பேரி அருகே மறுகால்தலை பூலுடையார்  சாஸ்தா கோயில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோயில், சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா கோயில், மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா கோயில், காளத்திமடம் ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா கோயில்,  வீரவநல்லூர் கல்லடி சாஸ்தா வனமூர்த்தி அய்யனார் கோயில், தாழையூத்து பாலுடையார் சாஸ்தா கோயில், மடவார் வளாகம் களக்கோட்டி சாஸ்தா, நாங்குநேரி அருகே சிறுமளஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா, களக்காடு  பெருவுடையார் சாஸ்தா உள்ளிட்ட பல்வேறு  கோயில்களில் பக்தர்கள்  நாளை பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இதையொட்டி பல கோயில்களில் இன்று காலை முதலே பந்தல் அலங்காரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, சிவகளை சேரந்தையர் சாஸ்தா, செய்துங்கநல்லூர் அருகே ஆழிக்குடி குருந்துடையார் சாஸ்தா, ஆதிச்சநல்லூர் பொய்சொல்லா மெய்யன்  சாஸ்தா, ஏரல் அருகே பச்சை பெருமாள் அய்யனார் சாஸ்தா, திருச்செந்தூர் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், குரும்பூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் சாஸ்தா உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர  விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அய்யனார் கோயில்கள் அதிகம் என்பதால் குலதெய்வ கோயில்கள் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அதிகளவில் குவிவர். பல கோயில்களில் கொளுத்தும் வெயிலுக்காக பக்தர்கள் சிறிய கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.

இன்று மாலை முதலே திரளான பக்தர்கள் கோயிலுக்கு கிளம்பி செல்கின்றனர். இதனால் வேன், கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பங்குனி உத்திர விழாவையொட்டி நாளை காலை சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் பொங்கலிடும் வைபவம், குலதெய்வ வழிபாடு நடக்கிறது. சில சாஸ்தா கோயில்களில் பால்குடம் எடுக்கும் வைபவங்களும் நடக்கின்றன. பிற்பகலில் கிடா வெட்டு நிகழ்ச்சி, அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முக்கிய சாஸ்தா கோயில்களுக்கு இன்று இரவு முதல் நாளை இரவு வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mela Uthiram ,festival ,temples ,Thoothukudi District Sastha Celebration , Nellai, Thoothukudi, Sastha Temple, Mararu Urthi Festival, Hire Vehicles
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா