×

முறைகேடு நடப்பதாக தடய அறிவியல் துறை அலுவலர் தகவல் ஜி.ஹெச்சில் தானமாக பெறும் உறுப்புகளை தனியார் மருத்துவமனைக்கு தருவது ஏன்?

* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்யவேண்டும் என 2008ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த தடயவியல் துறை அலுவலர் லோகநாதன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘தடயவியல் துறை அலுவலர்களின் பணி என்ன’ என கேள்வி எழுப்பினர். அதற்கு   அவர், ‘இதுவரை இதுதான் எங்களது பணி என வரையறுத்து கூறப்படவில்லை. மருத்துவர்கள் வழங்கும் பணியினை செய்து வருகிறோம்’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘மருத்துவ தடயவியல் துறை அலுவலர்களின் பணி என்ன? அந்த பணிக்கான கல்வித்தகுதி என்ன? இதுகுறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு என்ன காரணம்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு தடயவியல் துறை அலுவலர் லோகநாதன், ‘‘சில வழக்குகளில் குற்றங்களை மறைப்பதற்காக தாமதமாக பிரேத பரிசோதனை சான்று வழங்கப்படும்.

ஒரு சிலருக்கு மட்டும் அவ்வாறு வழங்கினால் சந்தேகம் வரும் என்பதற்காக பொதுவாகவே பிரேத பரிசோதனை சான்று தாமதமாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் வேலைக்கு வருவதில்லை. ஒருவர் வேலைக்கு வந்தால் கூட அவரே அனைவருக்கும் கையொப்பமிட்டு விடுவார். பிரேத பரிசோதனை சான்றுகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. எல்லாமே ‘கட், காப்பி, பேஸ்ட்’ தான். அதேபோல ஒரு சில வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ கூட மருத்துவமனையில் இருக்கும் தடயவியல் துறை அலுவலர்களை விசாரிப்பதில்லை. தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகிறது’’ என தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ‘‘சென்னையிலேயே ஏழுக்கும் அதிகமான அரசு மருத்துவமனைகள் உள்ளன. தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையில்லை என்ற நிலையிலேயே தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருக்கையில் அரசு மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி?’’ என கேள்வி எழுப்பி, வழக்கை ஏப். 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forensic science officer ,hospital , Department of Forensic Science, GHC, organs, private hospital
× RELATED எக்மோ சிபிஆர் புதிய திட்டம்...