×

போர்வெல் தண்ணீரும் வற்றியதால் பட்டுப்போகும் தென்னை மரங்கள் : பட்டிவீரன்பட்டி விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் மணல் திருட்டால் ஆழ்குழாய் கிணறு தண்ணீரும் வற்றி தென்னை மரங்கள் பட்டுப்போய் வருகின்றன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, நெல்லூர், தேவரப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் போதிய மழையின்மை, தூர்வாராதது காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இங்குள்ள முக்கிய நீராதாரமான மருதாநதி அணை வறண்டு ஆடு, மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறி விட்டது. மேலும் இப்பகுதி ஆறுகள் மணல் திருடும் கும்பலின் பிடியில் சிக்கி நிலத்தடி நீராதாரமும் வெகுவாக பாதித்து வருகிறது.

இதனால் கிணறுகளில் ஆழ்குழாய் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து தென்னை மரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் கூட தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஏற்கனவே போதிய மழையில்லாதது, தூர்வாராதது போன்ற காரணங்களால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்ட முகத்துடன் காட்சியளிக்கின்றன. தற்போது மணல் மாபியாக்களின் அட்டகாசத்தால் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்று வருகிறது.

பகல் இரவு என 24 மணிநேரமும் மணல் கடத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்காட்டி வருகின்றனர். இதனால் போர்வெல்லில் தண்ணீர் வற்றி தென்னை மரங்கள் பட்டுப்போய் வருகின்றன. எனவே நிலத்தடி நீராதாரத்தை பாதுகாத்து தென்னை விவசாயத்தை காப்பாற்ற மணல் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coconut trees, Pattiviranppatti, farmers
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...