×

திமுக தலைமையிலான கூட்டணியில் ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி: வைகோ அறிவிப்பு

சென்னை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு ெதாகுதியும், கொமதேக கட்சிக்கு ஒரு ெதாகுதியும், ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு போக மீதம் உள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகின்றது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைக்கு நடைபெற இருக்கின்ற 17வது பொதுத் தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளராக கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை குறிப்பு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு இவரது சொந்தஊர். தொழில் விவசாயம். தற்போது ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார். தந்தை அவிநாசிகவுண்டர், தாய் சாரதாம்பாள். மனைவி பாலாமணி, இறந்து விட்டார். தமிழ்பிரியா என்ற மகளும், கபிலன் என்ற மகனும் உள்ளனர். 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி பிறந்த இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். 1978ம் ஆண்டு திமுக மாணவரணி இணை அமைப்பாளராகவும், 1984ல் மாவட்ட திமுக செயலாளராகவும், 1989ல் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராகவும், 1998ல் பழனி நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது கட்சியில் மாநில பொருளாளராக இருந்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Ganesamoorthy ,coalition ,announcement ,Vaiko , DMK, Erode, Ganesamoorthy, Vaiko,
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...