×

காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலையில் பல கிலோ தங்கம் மாயமான விவகாரம்: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி அதிரடி கைது

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
* நன்கொடையாக பெற்ற 100 கிலோ தங்கம் குறித்து தீவிர விசாரணை

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பல கிலோ தங்கம் மோசடி செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும், சிலை தயாரிக்க நன்கொடையாக பெறப்பட்ட 100 கிலோ தங்கம் எங்கே என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் வரலாற்று புகழ்பெற்ற ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் உள்ள பழைய உற்சவர் (சோமாஸ்கந்தர்) சிலை சிதைந்துவிட்டது. இதை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரப்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், ஏலவார்குழலி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவு செய்யப்பட்டு சிலைகள் உருவாக்கப்பட்டன.

இதற்காக, பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை என்ற பக்தர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணை தொடங்கினர்.
அதில், சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் 8.770 கிலோ தங்கம் சேர்க்காமல் மோசடியில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து 9 பேர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலையை உருவாக்கிய முக்கிய குற்றவாளியான முத்தையா ஸ்தபதியை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். பிறகு நடந்த தொடர் விசாரணையில், ஆணையர் வீரசண்முகமணி, முத்தையா ஸ்தபதி மற்றும் சில ஸ்தானிகர்கள் சேர்ந்து தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை சிதைந்து விட்டதாக கோயில் வயதான ஸ்தானிகர்களை மிரட்டி அறிக்கை வாங்கியுள்ளனர். தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையில் 75 விழுக்காடு தங்கம் இருப்பதாக முத்தையா ஸ்தபதி தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2015ம் ஆண்டு 50 கிலோ எடையில் புதிய சோமாஸ்கந்தர் சிலை ெசய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், 111 கிலோ எடையில் சிலை செய்தால் அதிகளவில் தங்கம் நன்கொடையாக வாங்கலாம் என்று, 111 கிலோவில் சோமாஸ்கந்தர் சிலையை உருவாக்கி உள்ளனர். அதேபோல், 63 கிலோவில் ஏலவார்குழலி அம்மன் சிலை என 174 கிலோவில் இரண்டு சிலைகளும் செய்யப்பட்டன.

இந்த இரண்டு சிலைகளிலும் 5 விழுக்காடு அதாவது 8.770 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு சிலைகளிலும் துளி கூட தங்கம் சேர்க்கப்படவில்லை. சிலை செய்ய பொதுமக்களிடம் நன்கொடையாக 80 முதல் 100 கிலோ வரை தங்கம் வசூலித்துள்ளளது. அப்படி வசூலித்த தங்கத்தை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி, முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட சிலர் கூட்டாக மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையாராக இருந்த வீரசண்முகமணியை நேற்று காலை நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வீரசண்முகமணியை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பொதுமக்களிடம் 100 கிலோ தங்கம் குறித்து விசாரணை நடத்த வீரசண்முகமணியை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanchipuram Somaskanda ,Sri Lanka ,Commissioner ,Veeranankamamani , Kanchipuram Somaskanda Statue, Gold, Former Commissioner of Hindu Religious Affairs, Virasankamamani, hand
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...