×

பாதிக்கப்பட்ட பெண் பெயரை எஸ்.பி. வெளியிட்டது ஏன்?: அறிக்கை அளிக்க மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை: மாநில மகளிர் ஆணைய தலைவி  கண்ணகி பாக்கியநாதன் தலைமையில் விஜயலட்சுமி ராமமூர்த்தி, உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பொள்ளாச்சி சென்று, கோவை மாவட்ட கலெக்டர், எஸ்பியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.  இதை தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் அவர் உறுப்பினர்கள் ஜூலியட் செல்வி வீரபத்திரன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, உமாமகேஸ்வரி, அமுதா ஐஏஎஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கண்ணகி பாக்கியநாதன் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அடுத்த வாரம் மீண்டும் விரிவான விசாரணை மேற்கொள்ள பொள்ளாச்சிக்கு செல்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களை இன்னும் நேரில் பார்க்கவில்லை. அங்கு சூழ்நிலை இப்போது சரியில்லை. முழுமையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி விசாரணை
நேற்று 2வது நாளாக சிபிசிஐடி போலீசார்,  பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர், மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டிற்கு மாலை 4  மணியளவில் சிபிசிஐடி எஸ்பி., நிஷா மற்றும் போலீசார் சென்றனர். ஆனால் அங்கு,  திருநாவுக்கரசின் பாட்டி உள்ளிட்ட இருவர் மட்டும் இருந்துள்ளனர்.அப்போது அவர்கள், திருநாவுக்கரசை பார்ப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு  திருநாவுக்கரசின் தாய் சென்றுள்ளதாக, தெரிவித்தனர்.  இருப்பினும், சிபிசிஐடி எஸ்பி., நிஷா வீட்டிற்குள் சென்று சோதனை  மேற்கொண்டார். பின் கதவை சாத்திவிட்டு, வீட்டில் இருந்த இருவரிடம் விசாரணை  நடத்தினார்.

 திருநாவுக்கரசின் வீட்டிற்கு சிபிசிஐடி அதிகாரிகள் வந்துள்ளதையறிந்து பொதுமக்கள்  கூடியதால், 100மீட்டர் தூரத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. கோவையிலிருந்து இரவு 7.20 மணிக்கு வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசின் தாயார் லதாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தனர். சோதனை மாலை 3.30 மணிக்கு துவங்கியது.  தொடர்ந்து இரவு 7.45 மணி வரை நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய இதர  நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடியினர் செல்லும்போது, முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victim ,SSP ,Women's Commission , victim's girl, name,s SSP.
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...