×

மிசாவையே பார்த்த நாங்கள் ஐ.டி. ரெய்டுக்கு அஞ்சமாட்டோம்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திருச்சி: ‘‘மிசாவையே பார்த்த நாங்கள் ரெய்டுக்கு அஞ்சமாட்டோம்; பயப்படமாட்டோம். அதேவேளையில், தமிழகத்துக்கு மோடி வரும் விமானத்தில் மூட்டை மூட்டையாக பணம் வருவதை தடுக்க சோதனை நடத்தப்படுமா’’ என்று மு.க.ஸ்டாலின் வினா எழுப்பி இருக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளர்கள் பெரம்பலூர் தொகுதி பிரபாகரன், குன்னம் தொகுதி சிவசங்கர், ஜெயங்கொண்டம் தொகுதி கண்ணன், அரியலூர் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா  ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். sஅப்போது அவர் பேசியதாவது:- இந்த பகுதிக்கு வரும்போது எல்லாம் அனிதா என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவியை மறக்க முடியாது. அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். ஒரு தனி மனுஷியா இருந்து வழக்கு போட்டு, போராடிய வரலாறு உண்டு. இறுதியில் தனது உயிரையே அர்ப்பணித்த மாணவிதான் அனிதா. நாட்டுக்காகவும், மொழிக்காகவும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். தியாகம் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் கல்வி உரிமைக்காக தியாகம் செய்து உயிரை விட்டவர் அனிதா. அவரை யாராலும் மறக்க முடியாது. அதனால்தான், என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ என்ற அமைப்பை உருவாக்கி, 7 மாதங்களாக அங்கு வேலையில்லாமல் இருக்கும் மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு இதுவரை 1,000 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளோம் என்ற பெருமை எனக்கு உண்டு. அதனால்தான் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ உருவாக்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் உறுதிமொழியை நாம் தந்துள்ளோம்.சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தேன். பின்னர் அங்கிருந்து காரில் ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தபோது எனது மகள் செந்தாமரை வீட்டில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 100 போலீசாருடன் ரெய்டு செய்து கொண்டிருக்கின்றனர் என செய்தி கிடைத்தது. அதிமுக அரசை இன்று பாதுகாப்பது, காப்பாற்றிக் கொண்டிருப்பது மோடி அரசு. ஏற்கனவே அதிமுக அமைச்சர், முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் ரெய்டு நடத்தி, அந்த கட்சியை மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால், ஒன்று மட்டும் மோடிக்கு சொல்கிறேன். இது தி.மு.க. நான் கலைஞர் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிட மாட்டோம். மிசாவை, எம்ர்ஜென்சியை பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதை பற்றி கவலை படமாட்டோம். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கிறது. அதற்குள் இந்த தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்தி வீட்டில் படுக்க வைத்துவிடலாம் என பார்க்கின்றனர். அது தி.மு.க.காரன்கிட்ட நடக்காது. அ.தி.மு.க.காரன்கிட்ட நடக்கும். அவர்கள் வேண்டுமானால் மாநில உரிமைகளை விட்டுவிட்டு உங்கள் காலில் விழுந்து கிடக்கலாம். நாங்க பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இதற்கு எல்லாம் மக்கள் பதில் தரக்கூடிய நாள் ஏப்ரல் 6ம் தேதி என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் மக்கள் எழுச்சியை பார்க்கும்போது 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். தப்பித்தவறி ஒரு அ.தி.மு.க.காரன்கூட வெற்றி பெறக்கூடாது. பாஜ எங்கேயும் ஒரு வெற்றிகூட பெறாது. அதற்கு வெற்றி வாய்ப்பு இல்லை. நேற்று மதுரை வந்த பிரதமர், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வந்தார். இந்த தேர்தலில் தோற்க போறோம், தி.மு.க.வை மிரட்டனும், அச்சுறுத்தனும் என மோடி தலைமையில் அதிகாரிகளை வைத்து கூட்டம் போட்டு, இன்று ரெய்டு விடும் வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கு அஞ்சமாட்டோம். பயப்பட மாட்டோம். நீங்கள் இன்னும் ரெய்டு பண்ணுங்கு. ரெய்டு பண்ண பண்ண தி.மு.க. கிளர்ந்தெழும். நம் உரிமைகளை காப்பாற்றக்கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமைய போகிறது. இந்த தேர்தலில் நமது தன்மானம், சுயமரியாமை காக்கப்பட வேண்டும். நாம் இழந்து இருக்கக்கூடிய உரிமைகளை மீட்க வேண்டும். ஆனால் இன்று மதவெறியை கிளப்பி, எப்படியாவது தி.மு.க.வை அழிக்க, ஒழிக்க, குளோஸ் பண்ண திட்டமிட்டு, தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்தி, சமஸ்கிருதத்தை, திணித்து, நம்வீட்டு பிள்ளைகள் டாக்டராக வரக்கூடாது என்பதற்காக நீட்டை திணித்து இன்று மதவெறியை தூண்டுகின்றனர். நாம் இழந்த உரிமைகளை காப்பாற்ற, மாநில உரிமைகளை காப்பாற்ற மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.மூட்டை மூட்டையாக பணம் வருவதை தடுக்க மோடி விமானத்தில் சோதனை நடத்தப்படுமா?விழுப்புரம் மாவட்டம் வடலூரில், தி.மு.க. வேட்பாளர்களான குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, புவனகிரி- துரை கி. சரவணன், கடலூர் ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன்(விசிக), சிதம்பரம் அப்துல்ரகுமான்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  எனது மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாளை என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டோம். தேர்தல் நேரத்தில் அதுவும் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த சோதனை நடத்துவது என்ன நியாயம்? அப்படி என்றால் நான் ஒன்று கேட்கிறேன். பிரதமர் மோடி தமிழகம் வரும் விமானத்தில் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தேர்தலுக்காக கொடுக்கிறார் என கூறுகிறேன். அவர் வரும் விமானத்தை சோதனை நடத்த இந்த அதிகாரிகளுக்கு தைரியம் இருக்கிறதா. அவருக்கு ஒரு சட்டம்; எனக்கு ஒரு சட்டமா?. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.வன்னியர், தேவர், கவுண்டர்,  நாடார் மக்களுக்கு இடஒதுக்கீட்டை தி.மு.க.தான் பெற்றுத்தந்ததுஜெயங்கொண்டம் பிரசாரத்தில் இடஒதுக்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘அனைத்து சமூகத்திற்குமான இடஓதுக்கீட்டை வழங்கியது 1921ல் நீதிக்கட்சி என்பதை மறக்க முடியாது. இந்த ஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றத்தில் ஆபத்து வந்த போது கடுமையாக போராடி 1962ல் பெரியாரும், அண்ணாவும் அரசியல் அமைப்பு சட்டமைப்பை திருத்தினர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவீத ஒதுக்கீட்டை 31 சதவீதமாக மாற்றியது, பட்டியல் இனத்தோருக்கான இடஒதுக்கீட்டை 16லிருந்து 18 சதவீதமாக உயர்த்தியது தி.மு.க. ஆட்சி. இதில் பழங்குடியினரும் இருந்தாங்க. அதனால் அவர்களுக்கு தனியாக 1 சதவீதம் வழங்கி முழுமையாக 18ம் பட்டியல் இனத்தோருக்கு கிடைக்க வழிவகை செய்தது தி.மு.க… மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தி.மு.க.. 107 சாதியினருக்கு தனியாக 20சதவீதமாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரித்து இடஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க.தான். கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தது தி.மு.க… அருந்ததியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தந்தது தி.மு.க… இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க… வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் மக்களுக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை மண்டல் கமிஷன் மூலம் பெற்றுத்தந்தது. மத்திய அரசு பணிகளில் உள்ள 27 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான காரணம் தி.மு.க.தான்’’ என்று தெரிவித்தார்.சச்சின் டெண்டுல்கர் நலம் பெற வேண்டும்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post மிசாவையே பார்த்த நாங்கள் ஐ.டி. ரெய்டுக்கு அஞ்சமாட்டோம்: மு.க.ஸ்டாலின் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Misa ,M.K.Stalin ,Modi ,Tamil Nadu ,I.T. ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு