×

ஊட்டி குடியிருப்பில் புகுந்த கரடி 10 மணி நேரத்திற்கு பின் பிடிக்கப்பட்டது : முதுமலை வனத்தில் விட முடிவு

ஊட்டி: ஊட்டி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை 10 மணி நேர  போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இந்த கரடி முதுமலை அடர்ந்த வனத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டம் ஊட்டி நகரின் மார்க்கெட் எதிரே உள்ள வீடு ஓன்றின் சுவற்றில் கரடி ஒன்று நேற்று காலை நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.கரடியை பார்க்க மக்கள் கூடியதால் கரடி வீட்டின் பின் பகுதியில் இருந்த புதருக்குள் மறைந்து கொண்டது. தொடர்ந்து வனத்துறையினர்  மற்றும் போலீசார் கரடியால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா காலை 10.30 மணியளவில் கரடி பதுங்கியிருந்த இடத்தை  பார்வையிட்டார். பின், கரடியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கால்நடைத்துறை மண்டல இயக்குநர்  மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் மதியம் மேல்சம்பவ இடத்திற்கு சென்றனர். அதன்பின், கரடிக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு சுமார் 10 நிமிடங்கள் கழித்து பாதுகாப்பு கவசம் அணிந்த ஊழியர்கள் மயக்கமடைந்த கரடியின் கால்களில் கயிறு போட்டு கட்டினர். இதைத்தொடர்ந்து, சுமார் 10 பேர் கொண்ட ஊழியர்கள் கரடியை ஸ்டெரக்ச்சர் மூலம் மேலே கொண்டு வந்து தயாராக  இருந்த கூண்டில் அடைத்தனர்.

அப்போது மயக்க ஊசி செலுத்தப்பட்ட இடத்தில்  கரடிக்கு ரத்தம் கசிந்ததால் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்தனர்.  பின்னர், லாரியில் ஏற்றப்பட்ட கரடி அங்கிருந்து முதுமலைக்கு கொண்டு  செல்லப்பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு பின்பே கரடி பிடிக்கப்பட்டது. இதுகுறித்து  பொதுமக்கள் கூறியதாவது: ‘‘நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தொல்லை  அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து மனித  விலங்கு மோதல் நடக்கிறது.  இதுபோன்ற சமயத்தில், கால்நடை மருத்துவர்கள்,  மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர் இல்லை என்று வனத்துறையினர் சொல்வது  கவலை அளிக்கிறது.

எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  மேற்கொண்டு கால்நடை மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்’’. இவ்வாறு  பொதுமக்கள் கூறினர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்  சீனிவாசராவ் ரெட்டி கூறுகையில்: ‘‘இரவு நேரத்தில் வழிதவறி ஊருக்குள் கரடி  வந்துள்ளது. எனினும், யாரையும் தாக்கவில்லை. பிடிப்பட்ட கரடி சுமார் 8  வயதுள்ள ஆண் கரடி. இதனை முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த  வனப்பகுதிக்குள் கொண்டுச் சென்று விடப்படும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ooty ,Mudumalai Forest , Ooty, bear, Mudumalai
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...