×

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் மை வைக்க ரூ.32 கோடிக்கு ஆர்டர் கொடுத்த தேர்தல் ஆணையம்

மைசூரு: தேர்தல் என்றாலே கள்ள ஓட்டைத் தடுக்கவும், வாக்களித்தமைக்கு அடையாளமாகவும் வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அழியாத மை தானாகவே நினைவுக்கு வரும். என்ன தான் வாக்குச்சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு முறைக்கு மாறியிருந்தாலும் தற்போதும் வாக்களித்தவர்களுக்கு அடையாளமாக வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் மை  பூசப்படுகிறது. இந்த மை சில வாரங்களுக்கு நகங்களிலிருந்து அழியாமல் இருக்கும். தரப்படுத்தப்பட்ட அடையாளங்காட்டுதல் முறைமைகள் இல்லாத நாடுகளில் தேர்தல் மோசடியை தடுப்பதற்காக தேர்தல் மை வைப்பது ஒரு முறையாக அறியப்படுகிறது.  

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிட் நிறுவனம்தான் பிரத்யேக அழியாத மையைத் தயாரித்து வருகிறது. வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் இந்த அழியாத மை தயாரிப்பு முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது.. இந்தத் தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்காகவே இந்த மை தயாரிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து ரூ.32 கோடிக்கு மை தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. எம்பிவிஎல் நிறுவனம் கர்நாடக அரசால் நடத்தப்படும் நிறுவனமாகும். நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மையை 1962-ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனமே தயாரித்து வழங்கி வருகிறது.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள மை தயாரித்து வரும் நிறுவனம், ஏறக்குறைய 10 மில்லி அளவு கொண்ட 26 லட்சம் குப்பிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 20 லட்சம் குப்பிகள் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பல்வேறு மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஒரு குப்பியில் இருக்கும் மையை பயன்படுத்தி 700 முதல் 750 வாக்களர்களின் விரலில் மை வைக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அளித்த ஆர்டரைக் காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் குப்பிகளை தேர்தல் ஆணையம் தற்போது ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், கடந்த தேர்தலின் போது 22 லட்சம் குப்பிகளை அனுப்பி வைத்தோம். இந்த முறை அதைக்காட்டிலும் 4 லட்சம் கூடுதல் குப்பிகளை அனுப்ப உள்ளோம் என கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,election ,voters ,Lok Sabha , Electors, finger ink, Rs 32 crore Order, Election Commission
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...