×

மக்களவைத் தேர்தலால் பெரிய வியாழன் வழிபாட்டுக்கு இடையூறு : தேர்தல் ஆணையத்திற்கு பிஷப் கவுன்சில் கடிதம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18-ம் தேதி பெரிய வியாழன் வருவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுரை மாவட்ட பேராயர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயரும், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி பப்புசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் புனித நாள் வருகிறது.

பெரிய வியாழன் புனித நாளன்று தேர்தலை வைத்து கொள்ள உகந்தது கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள இயலாத சூழல் இருப்பதால், வழிபாட்டுக்கு உகந்தவாறு வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் ஈடுபடும் கிறிஸ்துவ சகோதர  சகோதரிகள் அன்றைய நாள் வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படும். அத்துடன், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் ஆலய வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருப்பதால், கிறிஸ்துவ மக்கள் வழிபாடு நடத்த பெரும் இடையூறாக இருக்கும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அதனால், கிறிஸ்துவ மக்களின் கோரிக்கையை ஏற்று, மாற்று தேதியில் தேர்தலை நடத்த ஆணையிட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bishop ,Election Commission ,election ,Lok Sabha , Lok Sabha election, big Thursday, voting
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...