×

கோவை, ராமநாதபுரம் தொகுதியை பிடிக்க பாஜகவினரிடையே கடும் போட்டி: தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைக்கு வேட்பாளர் ரெடி

சென்னை: பாஜகவில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். கோவை, ராமநாதபுரம் தொகுதியை பிடிக்க பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதிகளில் பாஜகவினர் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்படுகின்றனர். இவர்கள் 3 பேரும் தொகுதிகளில் இறங்கி பணி செய்ய தொடங்கியுள்ளனர். மீதியுள்ள 2 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. கோவை தொகுதிக்கு முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. எப்படியாவது தொகுதியை பிடித்து விட வேண்டும் என்பதில் 2 பேரும் உறுதியாக இருந்து வருகின்றனர். இதற்கான பணிகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் கட்சி மேலிடத்தில் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்.

இதனால், அவர் அந்த தொகுதியை கேட்டு மேலிடத்தை அணுகி வருகிறார். வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளராவார். இதனால் அந்த தொகுதியை தனது ஆதரவாளர்களுக்கு வாங்கி கொடுக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் களத்தில் இறங்கியுள்ளார். அதே நேரத்தில் ராமநாதபுரம் தொகுதிக்கு பாஜக பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜ துணை தலைவர் குப்புராம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குப்புராம் கடந்த தேர்தலில் 1,71,082 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தவர். அது மட்டுமல்லாமல்  சங்க் பரிவார் அமைப்புகளின் ஆதரவு அதிகமாக உள்ளது. கருப்பு முருகானந்தம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர், நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய தலைவரும், பிரதமருக்கு ரொம்ப நெருங்கமானவரின் ஒருவர் ஆதரவு இருந்து வருகிறது. அவர் அவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இப்படி 3 பேருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. கடைசியில் யார் அந்த சீட்டை பிடிக்க ேபாகிறார்கள் என்பது பாஜகவின் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rival ,constituency ,BJP ,candidate candidate ,Ramanathapuram ,Coimbatore ,Sivagangai ,Thoothukudi ,Kanyakumari , Coimbatore, Ramanathapuram, BJP leaders, Thoothukudi, Kanyakumari, Sivaganga
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...