×

பேராவூரணி ரயில் நிலையத்துக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள், போலீசார் விடிய விடிய சோதனை

பேராவூரணி: பேராவூரணி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போனில் வந்த மிரட்டலால் நள்ளிரவு முதல் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள், ரயில்வே போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை கன்ட்ரோல் அறைக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர் பேராவூரணி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் பதற்றமான அலுவலர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், பின்னர் தஞ்சை வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தஞ்சையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசாரும், ரயில்வே போலீசாரும் நள்ளிரவே பேராவூரணி ரயில் நிலையத்துக்கு வந்து சோதனையிட்டனர்.மெட்டல் டிடெக்டர் கொண்டு ரயில்நிலையத்தில் உள்ள 2 பிளாட்பார்ம்கள், பார்சல் அறை, டிக்கெட் கவுன்டர் உள்பட அனைத்து இடங்களையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். நள்ளிரவு 2.30 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சோதனை நடந்தது. விடிய விடிய நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு பிரிவு அலுவலர்கள், போலீசார் அங்கிருந்து சென்றனர்.இந்த சம்பவம் அதிகாலையே  ரயில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway station ,Experts ,Perravurani , Bombing station, phone, bomb threat, experts, police, testing
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!