×

ஆறு, விளைநிலங்களில் தொடரும் மணல் கொள்ளை

வில்லியனூர்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியங்குப்பம், அம்மணங்குப்பம், சடையாண்டிக்குப்பம் வழியாக சங்கராபரணி ஆறு செல்கிறது. இந்த ஆறு செஞ்சி பகுதியில் உருவாகி வீடூர் அணை வந்து, அங்கிருந்து புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளான மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செல்லிப்பட்டு, அம்மணங்குப்பம், கெண்டியங்குப்பம், தாண்டவமூர்த்திகுப்பம், கோனேரிக்குப்பம், நோணாங்குப்பம் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் பொய்த்து போனதால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்டு போயுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட கெண்டியங்குப்பம், அம்மணங்குப்பம், செல்லிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மணல் கொள்ளையர்கள் ஆற்றில் இருக்கும் மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் ஏற்றி விற்பனை செய்து வந்தனர்.

இதனால் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு, தற்போது மயானம் போல் காட்சியளிக்கிறது. இது சம்பந்தமாக அப்பகுதிகளை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் இயற்கை வளத்தை சுரண்டுவதாக வழக்கு தொடுத்தார். இதையடுத்து, மணல் கொள்ளையை வருவாய் துறையினர் தடுக்க வேண்டும். மணல் எடுத்து செல்லும் வழித்தடங்களில் இரும்பு தூண் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாமல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆற்றில் மணல் அள்ளுவது மட்டுமல்லாமல் சின்னபாபுசமுத்திரம், பெரியபாபு சமுத்திரம், பக்கிரிப்பாளையம், கலித்திராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் 100 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கெண்டியங்குப்பம் பகுதியில் உள்ள மணல் கொள்ளையர்கள் ஆற்றையொட்டிய விளைநிலங்களில் செங்கல் சூளை போடுவது போன்று பாவனை செய்துவிட்டு அங்கிருக்கும் மணலை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். அவற்றுடன் கடற்கரை மணல் மற்றும் வண்டல் மண்ணை கலந்து விற்பனை செய்கின்றனர். புதுச்சேரி நகரபகுதியில் மணல் லாரி பிடிபட்டால் தமிழகத்தில் இருந்து மணல் எடுத்து வருவதாக போலியான ரசீதையும், ஏற்கனவே மணல் எடுத்து வந்த ரசீதையும் காட்டிவிட்டு செல்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் நாளடைவில் கண்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விளைநிலங்கள் சூறையாடப்பட்டு விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்த மணல் கொள்ளையை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm , River, sand, robbery
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி