×

விமானப்படை தனி விமானத்தை தவிர்த்து தனியார் விமானத்தில் சென்றார் நிர்மலா சீதாராமன் : தேர்தல் அறிவிப்பு வெளியானதே காரணம்

சென்னை:  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னைக்கு நேற்று காலை வந்த மத்திய  பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரவு தனியார் விமானத்தில் டிக்கெட் புக் செய்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மத்திய,  மாநில அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11.20 மணிக்கு டெல்லியில் இருந்து இந்திய விமானப்படையின் தனி  விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் அவர் அதே இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இரவு 7 மணிக்கு  சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அவர் சென்னை  பழைய விமான நிலையம் கேட் எண் 5ல் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே தேர்தல் நன்னடத்தை நெறி முறைகள் அமலுக்கு வந்து விட்டதால் அவர் இந்திய விமானப்படை தனி விமானத்தில் டெல்லி திரும்ப முடியாது என்பதை அதிகாரிகள் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு, பயணிகள் விமானத்தில் டெல்லி செல்ல முடிவு செய்தார். அதற்காக அவரது உதவியாளர்கள் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் எந்த விமானத்தில்  டிக்கெட் இருக்கிறது என பார்த்தனர். இரவு 8.45 மணிக்கு தனியார் விமானத்தில் மட்டுமே டிக்கெட் உள்ளது என தெரியவந்தது. எனவே அதில்  அமைச்சருக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அமைச்சர் இரவு 7  மணிக்கெல்லாம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வறையில் காத்திருந்தார். அதே போல் அமைச்சர் விமான நிலையத்திற்கு அரசு காரில் வரவில்லை. அவரது கட்சியை சேர்ந்த  ஒருவரது காரில் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraaman ,The Airtel , Avoid aviation ,aircraft,election , reason why
× RELATED நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில...