×

வேலூர் மாவட்டத்தில் மரங்கள் அழிப்பு, வாகன புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் எவ்வளவு?: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மரங்களை அழிப்பது, வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசுவின் அளவினை கணக்கிட வெப்பசார் மாசு அறிக்கை தயாரிக்க உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக கடந்த 6ம்தேதி 105.6 டிகிரி வெயில் பதிவானது. வேலூர் மாவட்டத்தை சுற்றிலும் மலைகளில் உள்ள மலைகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களால், பசுமை அழிந்துவிடுகிறது. இதனால் மலைகளில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.இந்நிலையில் மரங்களை வெட்டுவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசடைந்து வருகிறது. இதுபோன்ற மாசுபாட்டை கணக்கிட வேலூர் மாவட்டத்தில் வெப்ப சார் மாசு அறிக்கை தயாரிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று அதிகளவில் மாசடைகிறது. தொழிற்சாலைகளில் இருந்தும் புகை வெளியேறுகிறது. மரங்கள் அதிகளவில் அழிக்கப்படுகிறது. இதனால், காற்றில் ஆக்சிஜன் குறையும். இதுபோன்ற காரணங்களால், இயற்கை சூழலின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வெப்பமயமாகி வருவதால் பூமி அழியும் அபாயமும் உள்ளது. எனவே, வெப்பமயமாகி வருவதற்கு காரணங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டியது அவசியம்.

இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வெப்ப சார் மாசு குறித்த கணக்கெடுப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒரு சில வாரங்களில் வேலூர் மாவட்டத்தில் வெப்பசார் மாசு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணியில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குழு களம் இறங்குவார்கள். இந்த அறிக்கை தலைமை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த அறிக்கையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவான வாகனங்கள்,  வனத்துறையிடம் பெறப்படும் தகவல்கள் ஆகியவையும் பதிவிடப்படுகிறது.  கோடைகாலத்தில் வெப்ப மாசு படுதலால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கண்காணிக்கப்படும். மாசுப்பாடு அதிகமாக இருந்தால் அவற்றுக்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

50 சதவீதம் காடுகள் அழிப்பு: கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகின் மழைக்காடுகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த மழைக்காடுகள் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து அழிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பிராண வாயுவின் அளவு அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், காடுகள் அழிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதையடுத்து காடுகள் விரிவாக்கத்துக்கு பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அதன்படி, பெரும்பாலான வனப்பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டும் இருக்கிறது.  இதற்காக, அதிகளவில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதியை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே எதிகால சந்ததியினர் வாழ முடியும் என்பதே உண்மை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore district , Vellore, the destruction of trees, vehicle smoke, pollution control board
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...