×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரி அற்புதம்மாள் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் : தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய கவர்னர் அனுமதி வழங்கிட வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இயக்குனர் கவுதமன் மற்றும் அமமுக நிர்வாகிகள், தமிழ் அமைப்புகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அண்ணா சாலையில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரையிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். பின்னர், தி.க. தலைவர் கி.வீரமனி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆறுமாத காலத்திற்கும் மேலாக அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். இது கண்டனத்திற்குரியது. கவர்னர் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய ஊர்களிலும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்புகளை தாண்டி பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Human chain fight ,release ,Tamils ,Valiyutamalai ,Perarivalan , Human chain fight led, Valiyutamalai demanding release , 7 Tamils , Perarivalan
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை