×

தலைமை செயலகத்தை கட்சி தலைமை நிலையமாக மாற்றிய பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்

சென்னை: அரசு தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சி தலைமை நிலையமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர்  பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை. தமிழக அரசின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி சட்ட விதி முறைகளுக்கு எதிராகவும் - அரசியல் சட்டத்தின்படி, தான் பதவியேற்கும்போது எடுத்த பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, தான் சார்ந்த அதிமுக கட்சிப் பணிகளுக்காக, தலைமைச் செயலகத்தை, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, நேற்றைய தினம் பயன்படுத்தி இருக்கிறார்.

இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் துணை போயிருக்கிறார்.அதிமுக. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் - அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம் சாட்டியதால், அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை, அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.அதிமுக கட்சிக்கென்று தலைமைக் கழக அலுவலகம் சென்னையிலேயே, அதுவும் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்போது, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்  ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது அதிகாரத்தை வேண்டுமென்றே துஷ்பிரயோகப்படுத்தி, தங்களது அரசியல் பணிகளுக்காக, அரசு தலைமை செயலகத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

தமிழக அரசின் தலைமைச் செயலாளராவது அவர்களுக்கு அந்த அடிப்படை விதிமுறையை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தை தவறாக பயன்படுத்தினால், அதற்கு தலைமைச் செயலாளரும் பொறுப்பாவார்.
எனவே, தமிழக ஆளுநர், இப்பிரச்சினையில் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்தும்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்தும் - தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,Panneerselvam ,RS Bharath ,chief secretariat ,DMK ,Governor , Palanisamy, Panneerselvam, DMK Secretary, RS Bharath
× RELATED ஹெட் ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த சோகம்!