×

வெயிலுக்கு ஆவியாகுது வைகை அணை நீர் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தில் சிக்கப்போகும் தென் மாவட்டங்கள்

* முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆண்டிபட்டி : மழைப்பொழிவு இல்லாததாலும், தற்போது அடிக்கும் வெயிலாலும் வைகை நீர்தேக்கப்பகுதியில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் வைகையை நம்பியுள்ள தென் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு அருகே உள்ள வைகை அணைக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளான மேகமலை, வெள்ளிமலை, வருசநாடு மலை, மூங்கிலாறு உள்ளிட்ட 9.40 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட மலைப் பகுதிகளிலிருந்து, மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால், வைகையின் மொத்த கொள்ளவு 71 அடியை எட்டவில்லை. இதனால் வைகை அணை வரலாறு காணாத அளவிற்கு நீர் மட்டம் 21.23 அடியாக சரிந்தது. மேலும் இந்த அணையை நம்பியிருந்த, ஐந்து மாவட்ட விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் வழங்கவில்லை. இதனால் பெரும் பாலான விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகி, பாலைவனமாக மாறி காணப்பட்டது.

மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு போதிய குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே குடிநீருக்காக சாலை மறியல்களும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த கடந்தாண்டு பரவலாக பருவமழை பெய்தது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியில் 69 அடியை இரண்டாவது முறையாக அணை நிரம்பியது.

 இதனையடுத்து அணையில் இருந்து கடந்த ஆண்டு அக்.21ம் தேதியில் வினாடிக்கு 4260 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்காக முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இவ்வாறு தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து. மேலும் கோடை துவங்கும் முன்பே கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைகை ஆறும் வறண்டது.

அத்துடன் அணையின் நீர்த்தேக்கப் பதியில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் அணைப்பகுதிக்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டதால்,வைகையை நம்பியுள்ள தென் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுப்பணித்துறையினர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நேற்றைய காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 45.69 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 1476 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை, தேனி மாவட்ட குடிநீருக்காக 60 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், `` கடந்த ஆண்டு இதே தேதியில் அணையின் நீர்மட்டம் 35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 45.63 அடியாக உள்ளதால் கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்கலாம். இருந்தாலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுப்பணித் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vayal Dam Vayal Water Water History , Vaigai Dam ,summer,Famine ,drinking water,southern districts
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!