×

ஆரவல்லியில் கட்டிடம் கட்டினால் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்: அரியானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘ஆரவல்லி மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டும் வகையில் சட்ட திருத்தம் செய்திருந்தால் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்’ என அரியானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. அரியானா மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு அது கடந்த மாதம் 27ம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம், ஆரவல்லி மலைப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் ரியல் எஸ்டேட் துறைக்கு மாற வழிவகுக்கும் என எதிர்கட்சிகளும், ஊடகங்களும் குற்றம் சாட்டின. இது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அரியானா அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, ‘‘சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது இன்னும் சட்டமாகவில்லை. இந்த சட்ட திருத்தம் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு சாதகமானது என ஊடகங்களில் வெளியான தகவல் தவறு. நில பாதுகாப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை நான் ஆய்வு செய்தேன். அடுத்த விசாரணையின் போது திருத்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆரவல்லி மலைப் பகுதி பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். அங்குள்ள வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால், சிக்கலை சந்திக்க வேண்டியிக்கும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : building ,Haryana ,Aravalli ,government , Aravalli, Haryana Government, Supreme Court
× RELATED தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்