×

5 ஆண்டுகளில் எடுத்த மணல் எவ்வளவு? இயற்கை வளங்களை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: இயற்கை நமக்கு வழங்கிய வளங்களை அழித்தால்,  வருங்காலம் நம்மை மன்னிக்காது’’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், குவாரிகளில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், தேவதானபுரத்தை சேர்ந்த பென்சிங், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கன்னியாகுமரி அருகே வேளிமலை, குளவிமலையில் செயல்படும் சட்டவிரோத குவாரிக்கு தடைவிதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்து, ``தமிழக  அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஆற்று மணல் மற்றும் எம்.சாண்ட் தேவைப்பட்டது? 5 ஆண்டுகளில் மணல் குவாரிகளில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது? 5 ஆண்டுகளில் எம்.சாண்ட் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது? பக்கத்து மாநிலங்களுக்கு  மணல், எம்.சாண்ட் கடத்தப்படுகிறதா?

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பக்கத்து மாநிலங்களுக்கு எம்.சாண்ட் மற்றும் மணல் கடத்தல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? அவ்வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? 5 ஆண்டுகளில் எம்.சாண்ட் மற்றும் மணல் குவாரிகளால்  அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு?’’ என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதனைதொடர்ந்து, இயற்கை நமக்கு வழங்கிய வளங்களை அழித்தால்,   வருங்காலம் நம்மை மன்னிக்காது’’ என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,Court of Justice , Sand, Natural Resources, Judge Branch, Judges
× RELATED ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில்...