×

ரூ.25 ஆயிரத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்குவதற்கு முன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்: அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபி: ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு முன்பாகவே, ரூ.10 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்கின்றனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளிட்ட 212 இயந்திரங்களை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற இயந்திரங்களை வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், விவசாயத்தை ஊக்குவிக்க அரசு சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மானியம் வழங்கி வருகிறது. அந்த மானியங்களை வழங்கும்போது தரமான நிறுவனங்களில் இருந்து பொருட்களை விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.

தரமற்ற நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது குறுகிய காலத்திலேயே பழுது ஏற்பட்டுவிடும். இதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் குழு உள்ளது. வாங்கும் பொருட்கள் தரமற்ற முறையில் இருந்தால், அது குறித்து விவசாயிகள் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர். அதேநேரத்தில், மானியம் வழங்கும் முன்பே அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வது வேதனை அளிக்கிறது. ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் வரை பெற்று கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளுக்கு மானிய விலையில் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottayan , Minister sengottayan
× RELATED அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி புயல்...