×

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மாவட்டம் அழிந்துவிடும் : எதிர்ப்பு குழு பேட்டி

நாகர்கோவில்:  கன்னியாகுமரி அடுத்த கோவளத்துக்கும், கீழ மணக்குடிக்கும் இடையே சரக்கு பெட்டக துறைமுகத்துக்கான கன்னியாகுமரி துறைமுக நிறுவனம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிலையில், துறைமுக எதிர்ப்பு குழுவினர் நேற்று நாகர்கோவிலில் பேட்டி அளித்தனர். இதுதொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற தலைவர் மரியதாசன், மீண்டும் எழும் குமரி இயக்க தலைவர் தாமஸ் பிராங்கோ, குமரி துறைமுக எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரபா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி பெட்டக துறைமுகம் திட்டத்தை பற்றி குமரி வருகை தந்த பிரதமர் எதுவும் குறிப்பிடாமல் சென்றது, அத்திட்டம் கைவிடப்பட்டதற்கு சமமாக கருதப்பட்டது. திடீரென நமது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அத்திட்டத்துக்கு துறைமுகம் கம்பெனி தொடங்கியது, குமரி மாவட்ட மக்களையும் இந்திய குடிமக்களையும் ஏமாற்றுகின்ற ஒரு செயலாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகிறது. கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மாவட்டம் அழிந்துவிடும். துறைமுக திட்டத்தை பற்றி மக்களிடம் விவாதிக்க வேண்டும். குளச்சலில் சிறிய வர்த்தக துறைமுகம் கொண்டு வரட்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வாசன் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த 2013ம் ஆண்டு கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க முடியாது என இத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  துறைமுகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanyakumari ,District ,Resistance Committee , Port of Kanyakumari , district will be destroyed
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...