×

திண்டுக்கல்லில் கு.க. செய்த 13 பெண்கள் கர்ப்பம்

* கலெக்டர் அதிர்ச்சி தகவல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குடும்ப கட்டுப்பாடு செய்த 13 பெண்கள்  மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளனர் என்று கலெக்டர் வினய் தெரிவித்தார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்பு பெண்களுக்கு கர்ப்பம் தரித்தல்,  இறப்புகள் நடப்பதை தடுப்பதற்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, குடும்பநலத்துறை துணை இயக்குனர் பூங்கோதை, காசநோய் துணை இயக்குனர் ராமச்சந்திரன், டாக்டர்கள் சுரேஷ்பாபு, சீனிவாசன், அன்பு செழியன்  உட்பட பலர் பங்கேற்றனர்.

இதை துவக்கி வைத்து   கலெக்டர் வினய் பேசுகையில்,  ‘‘திண்டுக்கல் அரசு மருத்துவமனை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. மேலும் திண்டுக்கல் மாவட்ட குடும்ப நலத்துறையினர் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதே நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்பு பெண்களின் இறப்புகளை குறைக்க வேண்டும். மீண்டும் கர்ப்பம் உண்டாவதையும் தடுக்க வேண்டும். இதற்காக நேர்த்தியான அறுவை சிகிச்சை முறையை நாம் பின்பற்ற வேண்டும். திண்டுக்கல், பழநியில் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இவற்றை குறைப்பதற்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு 9 ஆயிரத்து 600 குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்பு தாய்மார்கள் இறப்புகள் இல்லை. இன்னும் தாய், சேய் இறப்புகளை குறைக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மீண்டும் கர்ப்பம் அடைவதை தடுக்கும் வகையில் நேர்த்தியான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இதற்கான அனைத்து கருவிகளும் நம்மிடம் உள்ளது. ஆண்களுக்கான வாசக்டமி குறித்து இன்னும்  விழிப்புணர்வு செய்ய வேண்டும். ஆண்கள் அச்சப்பட தேவையில்லை என்பதை ஆய்வாளர்கள் கிராமங்களில்  விளக்க வேண்டும். வாசக்டமியில் இன்னும் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இதற்கு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதற்கு நாம் இன்னும் விழிப்புணர்வுகளை அதிகப்படுத்த வேண்டும்’’ என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dindigul ,girls , Dindigul ,family planning,preganant,women
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...