×

மாவட்டம் விட்டு மாவட்டம் அதிகாரிகள் இடமாற்றம் எதிர்த்து தாசில்தார், பிடிஓக்கள் போராட்டம் : தேர்தல் முன்னேற்பாடு பாதிக்கும் அபாயம்

தஞ்சை: தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்துவதால் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருவாய்த்துறையில் தாசில்தார் பதவிநிலைக்கு மேல் உள்ள அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓக்கள்) ஆகியோர் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 984 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாசில்தார் பதவி நிலையிலான அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதை ரத்து செய்யாவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் நேற்று முதல் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது: வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்தால் புதிய மாவட்டத்துக்கு சென்று தேர்தல் தொடர்பான பணிகளை செய்வதற்கு காலஅவகாசம் பிடிக்கும். இதனால் தேர்தலில் தொய்வு ஏற்படும். உயரதிகாரிகள் கேட்கும் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை உடனுக்குடன் வழங்குவதில் சிரமம் ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். அவ்வாறு வேலைநிறுத்தம் செய்தால் தேர்தல் பணிகள் முழுமையாக பாதிக்கும் என்றார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் கூறுகையில், திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்தால் எல்லா பணிகளும் தொய்வு ஏற்படும். இதில் தேர்தல் பணிகளும் அடங்கும். தஞ்சை மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ள 3.75 லட்சம் குடும்பங்களில் 1.60 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் தான் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் அப்படியே உள்ளது. இந்த பணிகளும் பாதிக்கப்படும். எனவே பணிமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thilisdar ,protest ,BOTOs ,district , Thilasdar, BOTOs protest ,officials transferred in district
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!