×

மருத்துவர்கள் குழு இல்லாத ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தெரிவிக்க முடியாது : ஐகோர்ட்டில் அப்போலோ பரபரப்பு வாதம்

சென்னை: மருத்துவ நிபுணர்கள் குழு இல்லாமல் நடத்தப்படும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எப்படி விசாரிக்க முடியும். எனவே, சிகிச்சை முறைகளை ஆணையத்தில் தெரிவிக்க முடியாது என்று அப்போலோ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடமும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஆணையம் சார்பில் மருத்துவக்குழு அமைக்கக்கோரி  அப்போலோ நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில்  வழக்குகளை தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையம்,  கடந்த 1984ல் காலமான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எங்கள் மருத்துவமனையில்  பெற்ற சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது. இதேபோல் இந்த ஆணையம் விசாரணை நடத்தினால் எங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். எனவே, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான டாக்டர்கள் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போலோ மருத்துவமனை சார்பில் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிட்டதாவது:ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது குறித்த ஆவணங்களை சேகரிக்க மட்டுமே விசாரணை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. சேகரிக்கப்பட்ட  ஆவணங்கள் அடிப்படையில் எந்த விசாரணையும் நடத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு கிடையாது. ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ், தமிழக அரசு மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள், லண்டன் இதய சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட்ஸ் பீலே போன்றோர் சிகிச்சை அளித்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அப்போலோ மருத்துவமனை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.

ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனுபவமற்ற டாக்டர்களால் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய முடியாது. இதுவரை பதிவு செய்யப்பட்ட 147 சாட்சி விசாரணையில், போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று சாட்சிகள் கூறினால் அதற்காக மருத்துவமனையை குற்றவாளியாக்க முடியுமா. மருத்துவர்கள் குழு இல்லாத ஆணையத்தால் எப்படி சிகிச்சை தொடர்பான விசாரணையை சரியாக நடத்த முடியும். எனவே, அப்போலோ மருத்துவர்கள் இல்லாத மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.  வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,committee ,doctors ,High Court , Jayalalithaa,treatment, Doctors Committee
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்